Templates by BIGtheme NET
Supreme-Court-refuses-to-accept-Justice-Kurna

நீதிபதி கர்ணன் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி,

தண்டனை உத்தரவை திரும்பப்பெற கோருகிற நீதிபதி கர்ணனின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

நீதிபதி கர்ணனுக்கு தண்டனை
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

கடந்த 9–ந் தேதி பிறப்பித்த அந்த உத்தரவில், அவரை உடனடியாக கைது செய்யுமாறு, மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

‘ரிட்‘ வழக்கு
ஆனால் அதன்படி அவரை கைது செய்ய மேற்கு வங்காள போலீஸ் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இதற்கிடையே அவருக்கு தண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறக்கோரி, அவரது வக்கீல் மேத்யூஸ் நெடும்பாரா ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் முன்பாக முறையிட்டார்.

ஆனால் அவர் மனுவை பதிவாளர் அலுவலகத்தில் அளிக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன.

சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு
இந்த நிலையில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 72–ன்படி, நீதிபதி கர்ணன் சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த கருணை மனு, இ–மெயில் மூலம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படி ஏதுமில்லை என்று ஜனாதிபதி அலுவலகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தண்டனையை திரும்பப்பெற கோருகிற நீதிபதி கர்ணனின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டது.

‘‘விசாரிக்க முடியாதது’’ என்ற வகையில் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் அந்த மனுவை பெறாமல் நிறுத்திவிட்டது.

உத்தரவு
இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்காக வழக்குகளை பட்டியலிடுகிற பதிவாளர் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

இதில் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்பட்டது. நீதிபதி சி.எஸ்.கர்ணன், மிகக்கடுமையாக அவமதித்து குற்றம் புரிந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வழக்குதாரர் குற்றவாளி என முடிவு செய்து 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதுவே இறுதியானது.

இந்த ‘ரிட்’ வழக்கு விசாரிக்க உகந்தது அல்ல. நிவாரணம் இருந்தால், அது வேறு எங்கோதான். எனவே இந்த ‘ரிட்’ வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 2013–ம் ஆண்டு விதிகளின்கீழ் பதிவு செய்வதற்கு ஏற்க நியாயமான காரணம் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*