Home » உலகச்செய்திகள் » நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: கேரள தம்பதியின் கனவு கலைந்தது
New-Zealand-gunfire-The-dream-of-Kerala-couple-split

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: கேரள தம்பதியின் கனவு கலைந்தது

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த 15-ந்தேதி அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டது. அவர்களின் பெயரை நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

பலியான இந்தியர்களில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்களூரைச் சேர்ந்த அன்சி அலிபாவா (வயது 25) என்ற பெண்ணும் அடங்குவார்.

அவருடைய கணவர் அப்துல் நாசர் (34) உயிர் பிழைத்து விட்டார். எத்தனையோ கனவுகளுடன் நியூசிலாந்துக்கு சென்ற இவர்களது கனவு ஒரே நொடியில் கலைந்து விட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அன்சி அலிபாவாவுக்கு வேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலைப் படிப்பு படிக்க ஆசை. அதனால், கடந்த ஆண்டு 48 ஆயிரம் டாலர் கடன் வாங்கி, நியூசிலாந்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள லிங்கான் பல்கலைக்கழகத்தில் அன்சி சேர்ந்தார். புத்திசாலி மாணவியாக திகழ்ந்த அன்சி, பேராசிரியர்கள் உள்பட எல்லோரும் விரும்பக்கூடியவராக இருந்தார். மனைவிக்கு உதவுவதற்காக, அப்துல் நாசர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

3 வாரங்களுக்கு முன்புதான் அன்சியின் படிப்பு முடிந்தது. இனிமேல், அதிக சம்பளத்தில் அன்சிக்கு வேலை கிடைக்கும் என்றும், இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் இருவரும் கனவு கண்டனர்.

இந்த கனவுகளுடன், கடந்த 15-ந் தேதி மசூதியில் பிரார்த்தனையில் இருந்தபோதுதான் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில், இவர்களது கனவு கலைந்தது.

இதுகுறித்து அப்துல் நாசர் கூறியதாவது:-

மசூதியில் இருவரும் தனித்தனி பகுதியில் அமர்ந்து இருந்தோம். திடீரென ஒரு சத்தம் கேட்டவுடன், வெளியே குழந்தைகள் பலூன் வெடித்திருக்கலாம் என்று கருதினேன். பின்னர், பயங்கர ஆயுதங்களை பார்த்ததும், 300-க்கும் மேற்பட்டோர் வாசலை நோக்கி ஓடத் தொடங்கினர்.

நான் வாசல் அருகே இருந்தேன். கதவில் உள்ள கண்ணாடியை சிலர் உடைத்தனர். உடனே நான் வெளியேறினேன். பிறகு பக்கத்து வீட்டுக்கு சென்று, தொலைபேசியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். மீண்டும் மசூதிக்கு வந்து, அன்சியை தேடினேன். அவள் அசைவற்று கிடப்பதை பார்த்து அவளை நோக்கி ஓடினேன்.

ஆனால், ஒரு போலீஸ்காரர் தடுத்து விட்டார். அடுத்த 24 மணி நேரத்தில், எங்கள் வீட்டுக்கு வந்த போலீசார், அன்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவள் எங்காவது சிகிச்சை பெற்று வருவாள் என்று நினைத்து இருந்தேன். ஏதேனும் அதிசயம் நடக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அன்சி உடலை அவளது பெற்றோரின் இல்லத்துக்கு அனுப்ப சொல்லி உள்ளேன். இதுபோன்று யாருக்கும் நடக்கக்கூடாது.

இவ்வாறு அப்துல் நாசர் கூறினார்.

கிறைஸ்ட்சர்ச் நகரில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், அப்துல் நாசர் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறினர். அன்சியின் படிப்புக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, அப்துல் நாசருக்கு அவர்கள் நிதி திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஐதராபாத்தை சேர்ந்த பர்ஹஜ் அசன் (30) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரும் பலியாகி உள்ளார். இதை நியூசிலாந்து அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த இம்ரான்கான், சுலேமான் படேல் ஆகிய இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.