Home » உலகச்செய்திகள் » நியூசிலாந்தில் வெடிகுண்டு புரளியால் விமான நிலையம் மூடல்
Bomb-hoax-closure-of-the-airport-in-New-Zealand

நியூசிலாந்தில் வெடிகுண்டு புரளியால் விமான நிலையம் மூடல்

வெலிங்டன்,

உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக விளங்கும் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை 2 மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதல் நியூசிலாந்தின் அமைதியை சீர்குலைத்துள்ளது, மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ஒடாகோ பிராந்தியத்தில் டுனேடின் நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியது.

இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் உள்பட அனைவரும் பீதியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின்னர் விமானநிலையம் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து வந்து, அந்த மர்ம பையை சோதனை செய்தனர். அப்போது, பையில் சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டது. வெடிகுண்டு புரளிக்கு காரணமான அந்த பையை விமான நிலையத்தில் விட்டு சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.