பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.47 லட்சம் கோடியை எட்டியது
2000 rupee

நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.47 லட்சம் கோடியை எட்டியது

நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜூலை இறுதி நிலவரப்படி ரூ.5.47 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வரவுக்கும் மற்றும் செலவுக்கும் உள்ள இடைவெளியானது (நிதிப் பற்றாக்குறை) சென்ற ஜூலை மாத இறுதி நிலவரப்படி ரூ.5,47,605 கோடியை எட்டியுள்ளது. நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் இது 77.8 சதவீதம்.

கடந்த 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 86.5 சதவீதமாக காணப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையானது ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறையை 3.3 சதவீதமாக வைத்திருக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் மதிப்பீட்டில் மூலதன செலவினம் 31.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 37.1 சதவீதமாக காணப்பட்டது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் மொத்த செலவினம் ரூ.9.47 லட்சம் கோடியாக இருந்தது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் 34 சதவீதம். முந்தைய நிதியாண்டில் இது 36.4 சதவீதமாக காணப்பட்டது.
வரும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.27.86 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என சிஜிஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.