சற்று முன்
Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் ராணுவ வீரர்கள் நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
Held-in-Nagercoil-by-soldiersVegetable-planting-show

நாகர்கோவிலில் ராணுவ வீரர்கள் நடத்திய மரக்கன்று நடும் நிகழ்ச்சி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 3,500 வீரர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக சமூக பணியாற்றி வருகிறார்கள். அதாவது ரத்ததானம், தூய்மை பணி, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்கள். விடுமுறைக்கு ஊருக்கு வரும் ராணுவ வீரர்களால் மட்டுமே இந்த சமூக பணிகளில் ஈடுபட முடியும்.

இந்த நிலையில் தற்போது ஊருக்கு வந்திருக்கும் 155 ராணுவ வீரர்கள் இணைந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் தன்னார்வத்துடன் சமூக சேவை செய்வதை பாராட்டுகிறேன். ராணுவ வீரர்களின் விழிப்புணர்வு தன்னார்வ சேவைக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ராணுவ வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். குமரி மாவட்டத்தில் மட்டும் அல்லாது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் இதுபோன்ற தன்னார்வ சமூக சேவைகள் செய்து வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது.

ராணுவ வீரர்கள் சார்பில் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தடகள போட்டிகள் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே போட்டிகளில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் 6385913009, 9435259881 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.