Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் பயங்கரம்: டெம்போ டிரைவர் குத்திக்கொலை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
Terror-in-Nagercoil-2-arrested-including-tempo-driver

நாகர்கோவிலில் பயங்கரம்: டெம்போ டிரைவர் குத்திக்கொலை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

நாகர்கோவில்,

நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரகு (வயது 32). டெம்போ டிரைவரான இவர், அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று வந்தார். இவருக்கு அபிஷா (24) என்ற மனைவியும், தர்ஷன் என்ற மகனும், தன்ஷிகா என்ற மகளும் உள்ளனர். ரகுவும், அபிஷாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ரகுவுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரகுவுடன் வாழப்பிடிக்காமல் அபிஷா தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குளச்சலில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் ஆகிறது. அபிஷாவின் தாயார் ரமணி (40), இருளப்பபுரத்தில் உள்ள ஒரு ரப்பர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ரகு அடிக்கடி ரப்பர் கம்பெனிக்கு சென்று, அபிஷாவை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி ரமணியிடம் கூறி வந்துள்ளார். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு ரப்பர் கம்பெனிக்கு சென்று தகராறு செய்ததாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக ரப்பர் கம்பெனி உரிமையாளரான தர்மராஜ் என்ற தர்மர் (42) என்பவருக்கும், ரகுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அபிஷாவை அவருடைய கணவர் ரகுவுடன் செல்ல கூடாது என்று தர்மர் கூறியுள்ளார். இதனால் தான் அபிஷா கணவருடன் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரகு நேற்று முன்தினம் இரவு தர்மரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அதோடு மட்டும் அல்லாது அபிஷா பிரிந்து செல்ல தர்மர் தான் காரணம் என்று கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் அப்போது தர்மர் வீட்டில் இல்லை. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த தர்மரும், அவருடைய உறவினர்கள் மேக்மில்லன் மற்றும் மார்ஷல் டென்சிங் (18) ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து ரகு வைத்திருந்த கத்தியை அவர்கள் பறித்து ரகுவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரகு உயிருக்கு பயந்து ஓடினார். ஆனாலும் அவர்கள் விடாமல் துரத்தி சென்று இரும்பு குழாயை கொண்டு ரகுவின் மார்பில் குத்தியதாகவும் தெரிகிறது. இதனால் ரகு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த படுகொலை நடந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் ரோட்டில் பிணம் கிடந்ததை யாரும் பார்க்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை சுமார் 7 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் பிணத்தை பார்த்து உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகுவின் உடலை மீட்டனர். ரகுவின் உடலை பார்த்து அவருடைய தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து ரகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரகுவை கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு குழாயையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் கொலை நடந்த இடத்தின் அருகே உள்ள ஒரு கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. எனவே கொலை சம்பவம் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலையில் ரப்பர் கம்பெனி உரிமையாளர் தர்மர், மேக்மில்லன், மார்ஷல் டென்சிங் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த தர்மரும், மார்ஷல் டென்சிங்கும் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து சரண் அடைந்தனர். இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அபிஷாவை எதற்காக அவருடைய கணவருடன் செல்ல கூடாது என்று தர்மர் கூறினார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும். திருமணத்துக்கு முன் அபிஷா அதே ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அபிஷாவின் திருமணத்தை தர்மர் தான் முன்னின்று நடத்தி வைத்ததாகவும் தெரிகிறது. அப்படி இருக்க ரகுவை கொலை செய்வதற்கு வேறு காரணம் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட மார்ஷல் டென்சிங் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மேக்மில்லனை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரகு மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.