Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
201908120240174533_Independence-Day-preparations-in-Nagercoil-intensified_SECVPF

நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்,

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போல் குமரி மாவட்டத்திலும் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதைத் தொடர்ந்து போலீசாரின் கண்கவர் அணி வகுப்பு, மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் இடம் பெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

சுதந்திர தினத்தன்று ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது. குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

மார்த்தாண்டம், வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட உள்ளன. கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் நேற்று இரவு முதல் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதோடு தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்றும் போலீசார் சோதனை நடக்கிறது. இதுபோக கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகு மூலமாக கடலுக்குள் சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் படகுகள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயிலும் அமைக்கப்பட உள்ளது.

சுதந்திர தின விழா நடைபெற உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட இருப்பதாகவும், மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.