Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றம் 4 மரங்கள் வேரோடு வேறு இடத்துக்கு மாற்றம் வேப்பமூட்டில் மருத்துவமனை கட்டிடம் இடிப்பு
Nagarcoil-has-been-destroyed-by-4-trees-in-the-root-zone

நாகர்கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றம் 4 மரங்கள் வேரோடு வேறு இடத்துக்கு மாற்றம் வேப்பமூட்டில் மருத்துவமனை கட்டிடம் இடிப்பு

நாகர்கோவில், ஜூன் 13: நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. நாகர்கோவில் நகராட்சியில் அனைத்து சாலைகளும் குறுகிய சாலைகள் என்றாலும், சாலைகள் ஆக்ரமிப்பும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆகின்றது. வடசேரி பஸ் நிலையம், கனகமூலம்சந்தை, நாகராஜா கோயில் ரத வீதிகள் மற்றும் செம்மாங்குடி சாலை போன்ற இடங்களில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் ஆக்ரமிப்புகள் அகற்றினாலும், மறுநாளே ஆக்ரமிப்புகள் ஏற்பட்டு விட்டன. இந்நிலையில் பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது, மீண்டும் ஆக்ரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், மழைக்காலங்களில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் வெள்ளம் சூழ்ந்து ஆறுபோல் தண்ணீர் ஓடுவதை தடுக்கும் வகையிலும், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு, நடைமேடை மற்றும் அலங்கார இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளதாக ஆணையர் சரவணக்குமார் கூறினார்.

வேப்பமூடு சந்திப்பில் இருந்த போக்குவரத்து கழக மருத்துவமனை வடிவீசுவரம் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதால், அங்கு மோசமான நிலையில் இருந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று மதியம் தொடங்கியது. நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், தேவி ஆகியோர் முன்னிலையில் கட்டிடம் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில், 4 மரங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நின்றன. இதனையடுத்து இந்த மரங்களை வேரோடு பிடுங்கி, அருகில் உள்ள பெதஸ்தா வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள பூங்காவிற்கு இடம் மாற்றி நடப்பட்டது. இந்த 4 மரங்கள் மீண்டும் தளிர்க்கும் வரை தினசரி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையர் சரவணக்குமார் கூறினர்.

செம்மாங்குடி சாலையில் ஆக்ரமிப்பு
செம்மாங்குடி சாலையின் தெற்கு பகுதியில் நகராட்சி குடிநீர் குழாயை ஆக்ரமித்து டீக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே நிரந்தர கட்டிடமும் கட்டப்பட்டு, தனியாரால் வாடகை தினசரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் காமராஜர் பில்டிங், கூட்டுறவு வங்கி இடையே ஆக்ரமிப்பு கடைகள் உள்ளன. இவற்றையும் அகற்ற நகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.