Home » இந்தியா செய்திகள் » நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் படி அழுத்தம் கொடுக்கின்றனர்- நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டு
nat5

நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் படி அழுத்தம் கொடுக்கின்றனர்- நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுப்பதாக சுஷாந்த் சிங்கின் நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் வளர்ந்து வந்த நடிகரான சுஷாந்த் சிங் கடந்த மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் அவரது தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்தி திரையுலகை சேர்ந்த 40 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் விசாரணைக்காக மும்பை வந்துள்ளனர். இதன் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பாட்னா போலீசார் நேற்றுமுன்தினம் ரியா சக்ரபோர்த்தியின் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி அங்கிதா லோகண்டேயின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டி அவரது குடும்பத்தினர் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக பாந்திராவை சேர்ந்த சுஷாந்த் சிங்கின் நண்பர் சித்தார்த் பிதானி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாந்திரா போலீஸ் நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ-மெயில் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜூலை 22-ந்தேதி சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து எனக்கு கான்பரன்ஸ் அழைப்புகள் வந்தது. அதில் ரியா சக்ரபோர்த்தி பாந்திராவில் உள்ள மான்ட் பினாங்க் குடியிருப்பில் சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த போது செய்த செலவுகள் குறித்து கேட்டனர்.

பின்னர் கடந்த 27-ந் தேதி மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர் ஒருவர், ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக பீகார் போலீசிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என கேட்டார். மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்று அவர் கூறினார். அதன்படி தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்பு 40 வினாடிகளில் முடிந்து விட்டது. இதனால் அந்த அழைப்பில் எதையும் பேச முடியவில்லை.

ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்ததாக அவரது நண்பரே தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, உண்மை நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ள ரியா சக்ரபோர்த்தி, நீதித்துறை மீதும் கடவுள் மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.