Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் » நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி
Will-actor-Sivakarthikeyan-vote-for

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி

சென்னை,

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார் என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி தெளிவாக தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

எனவே அவர் பெயர் எப்படி நீக்கப்பட்டது?, பெயர் இல்லாத நிலையில் அவரை ஏன் அனுமதித்தீர்கள்? என்ற கோணத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. தவறிழைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பளத்தைக் குறைப்பது, பதவியை குறைப்பது போன்ற பலவகை நடவடிக்கைகள் உள்ளன.

நிர்ப்பந்தித்தாரா?

ஓட்டளிப்பதில் நிர்ப்பந்தம் இருந்ததா?, அல்லது மனித தவறு காரணமா? என்ற விவரங்கள் பார்க்கப்பட வேண்டும். ஓட்டளிக்க அனுமதித்ததாக வாக்குச்சாவடி முதன்மை அதிகாரி கூறியதாக எனக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் 303-ம் எண் வாக்குச்சாவடியில் (குட் ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவுக்கு ஓட்டு உள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டாலும், கடும் போராட்டத்துக்குப் பிறகு வாக்களித்தார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பின்னர், ‘வாக்களிப்பது உங்கள் உரிமை, உரிமைக்காக போராடுங்கள்’ என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்த விவரங்களையெல்லாம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம். அதில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆணையம் தெரிவிக்கும்.

தவறான பதிவுதான்

சிவகார்த்திகேயன் வாக்களித்ததில் நிர்வாகத் தவறுகள் நடந்திருக்கின்றன என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒரு ஓட்டு தவறாகிவிட்டது. எனவே வாக்கு வித்தியாசம் பார்த்துவிட்டு அதில் முடிவெடுக்கலாம்.

அந்த ஓட்டு தற்போது பதிவாகி விட்டது. அதுவும் தவறாக பதிவாகிவிட்டது. எனவே அதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. எண்ணப்படும் போது அதுவும் சேர்ந்துவிடும். தவறாக ஒரு ஓட்டு பதிவாகி இருந்தாலும், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு தேவையில்லை. வெற்றியை ஒரு ஓட்டு நிர்ணயிக்கிறதா என்பதை கடைசியில் பார்ப்போம்.

நடிகர் ஸ்ரீகாந்த் விவகாரம்

நடிகர் ஸ்ரீகாந்த் விவகாரத்தில், ஆரம்பத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையில், பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், ஸ்ரீகாந்த் வாக்களிக்காமல் வாக்குச்சாவடியை விட்டுச் சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முதன்மை அதிகாரியும், ஸ்ரீகாந்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஸ்ரீகாந்த் வாக்களித்ததாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் வாக்களித்தது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. பெருவிரல் ரேகையை பதிவு செய்துகொண்டு வாக்களிக்க அனுமதித்ததாக ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

எனவே அந்த வாக்குச்சாவடியில் என்னதான் நடந்தது? என்பதுபற்றி விளக்கமான அறிக்கையை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீகாந்தின் பெயர் எப்படி நீக்கப்பட்டது?, அதற்கு விண்ணப்பிக்கப்பட்டு இருந்ததா? என்ற விவரங்களையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.

மதுரை

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த ஸ்டோர் ரூம்க்கு பெண் அதிகாரி சென்ற விவகாரத்தில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரணை நடத்தி முடித்துவிட்டார். என்னிடம் அறிக்கையும் சமர்ப்பித்து இருக்கிறார்.

அதை நான் விளக்கமாக படித்துவிட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்றே (நேற்று) அனுப்பி வைப்பேன். ரகசியமான அறிக்கை என்பதால் அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது.

கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுகோள் வைத்திருந்தார். அங்குள்ள மாவட்ட கலெக்டர், அங்கு நல்லவிதமாக பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார். என்றாலும், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜாராமன் இங்கிருந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட உள்ளார்.

இழப்பீடு உயர்வு

தேர்தல் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் புதிய உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு இயல்பாக இறந்தவர்களின் வாரிசுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டு வந்த ரூ.10 லட்சம் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல தேர்தல் பணியில் பயங்கரவாத செயல்பாடுகளால் கொலை செய்யப்படுவோரின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.20 லட்சம் இழப்பீடு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் வாரிசுகளை முடிவு செய்வதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இழப்பீட்டை வழங்க நாங்கள் தயாராக இருந்தாலும், மகனுக்கா?, மகளுக்கா?, மனைவிக்கா? என்பதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால், சற்று காலதாமதம் ஏற்படுகிறது.

அதுபோல கை, கால் நிரந்தர செயலிழப்பு, கண் பார்வை இழப்பு போன்ற இழப்புகளுக்காக ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சமூக விரோதிகளின் தாக்குதலினால் இதுபோன்ற இழப்புகள் நேரிட்டால், ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

இடைத்தேர்தல் சோதனை

இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், அந்த மாவட்டங்களிலும் பறக்கும்படை, கண்காணிப்புக்குழு சோதனை நடத்தப்படுகிறது. அங்கு நடந்த சோதனையில் ரூ.6,84 லட்சம் பணம் பிடிபட்டது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் ரூ.6.60 லட்சம் பிடிக்கப்பட்டது.

ஒரு தேர்தல் முடிந்து, அடுத்தகட்டமாக சில தொகுதிகளில் மட்டும் மற்றொரு தேர்தல் நடக்க இருக்கும்பட்சத்தில், தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா ஒரு பறக்கும்படை செயல்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும்.

பறக்கும்படை

தேர்தல் நடக்கும் தொகுதிக்கான மாவட்டத்தில் தலா 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக் குழு பணியில் இருக்கும். சில சட்டமன்றத் தொகுதி, 2 மாவட்டத்தையும் சேர்த்து அமைந்திருக்கும். அப்படி இருந்தால் அந்த 2 மாவட்டங்களிலும் தலா 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்படும்.

சூலூர் சட்டமன்றத்தொகுதி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.