Home » விளையாட்டுச்செய்திகள் » தென் ஆப்பிரிக்காவின் அதிரடியை சமாளிக்குமா இந்திய இளம் அணி? இன்று முதல் ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்காவின் அதிரடியை சமாளிக்குமா இந்திய இளம் அணி? இன்று முதல் ஒருநாள் போட்டி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. லக்னோ, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது. ஆனால் இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் தொடக்க ஆட்டத்தில் 106 ரன்னில் அடங்கி தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்கா அணி 2-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றதுடன், இலக்கை விரட்டுகையில் 221 ரன்கள் குவித்து மிரட்டியது.

கடைசி ஆட்டத்தில் 227 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்கா 18.3 ஓவர்களில் 178 ரன்னில் இந்தியாவை ஆல்-அவுட் செய்து அசத்தியது. 2-வது ஆட்டத்தில் டேவிட் மில்லரும், கடைசி ஆட்டத்தில் ரிலீ ரோசவ்வும் சதம் அடித்து அசத்தினர். கடைசி 2 ஆட்டங்களிலும் குயின்டாக் டி காக் அரைசதம் விளாசினார். கடைசி ஆட்டத்தில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களும் கலக்கினர். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், கேப்டன் பவுமா, ரோசவ், ரீஜா ஹென்ரிக்ஸ் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். பவுமா தொடர்ந்து சொதப்பி வருகிறார். பந்து வீச்சில் இங்கிடி, அன்ரிச் நோர்டியா, வெய்ன் பார்னெல், ரபடா, பிரிட்டோரியஸ் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.