Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள் » தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5-வது ஒரு நாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா சதத்தால் இந்தியா 274 ரன்கள் சேர்ப்பு
5th-One-Day-CricketRohit-Sharma-centIndia-added-274

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5-வது ஒரு நாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா சதத்தால் இந்தியா 274 ரன்கள் சேர்ப்பு

போர் எலிசபெத், –

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 274 ரன்கள் சேர்த்தது.

5-வது ஆட்டம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் முதுகுவலியால் அவதிப்படும் கிறிஸ் மோரிசுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராம் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் 4 ஆட்டங்களிலும் சோபிக்காததால் விமர்சனத்திற்குள்ளான ரோகித் சர்மா நிதானத்தை கடைபிடித்தார். மறுமுனையில் ஷிகர் தவான் அதிரடி காட்டினார். பேட்ஸ்மேன்களுக்கு உகந்த வகையிலேயே ஆடுகளத்தன்மை தெரிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்க பவுலர்கள் ‘ஷாட்பிட்ச்’ பந்தை பிரதான அஸ்திரமாக கொண்டு அதிகமாக தாக்குதல் தொடுத்தனர்.

மோர்கலின் ஒரே ஓவரில் தவான் 3 பவுண்டரி விரட்டியடித்து அசத்தினார். இந்த சுற்றுப்பயணத்தில் தனது விக்கெட்டை 6 முறை ரபடாவின் பந்து வீச்சில் தாரை வார்த்த ரோகித் சர்மா இந்த முறை அவரது பந்து வீச்சில் ஒரு இமாலய சிக்சரை தூக்கினார்.

தவான் 34 ரன்

ஓரளவு நல்ல தொடக்கம் தந்த இந்த ஜோடி 48 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. ரபடா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை தவான் (34 ரன், 23 பந்து, 8 பவுண்டரி) வளைத்துப்பிடித்து அடித்த போது, பெலக்வாயோவிடம் கேட்ச் ஆகிப்போனார்.

2-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் கைகோர்த்தார். நிலைத்து நின்று ஆடிய இவர்கள் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு ஓடவிட்டு அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். 17.1 ஓவர்களில் நமது அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்தியா எளிதில் 300 ரன்களை கடக்கும் போலவே தோன்றியது.

திருப்பம் தந்த ரன்-அவுட்

ஆனால் எதிர்பாராத இரண்டு ரன்-அவுட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அணியின் ஸ்கோர் 153 ரன்களை (25.3 ஓவர்) எட்டிய போது கேப்டன் விராட் கோலி (36 ரன், 54 பந்து, 2 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அதாவது ரோகித் சர்மா பந்தை அருகில் தட்டிவிட்டு ரன்னுக்காக சில அடி தூரம் ஓடிவிட்டு, பிறகு வேண்டாம் என்று கை காட்டினார். அதற்குள் பாதி தூரம் ஓடிவந்து விட்ட கோலி, வேறுவழியின்றி தனது முனைக்கு திரும்ப முயற்சித்தார். அதற்குள் பந்தை பீல்டிங் செய்த டுமினி கச்சிதமாக ஸ்டம்பை தாக்கி ரன்-அவுட் செய்து விட்டார். கோலி அதிருப்தியுடன் வெளியேறினார்.

அடுத்து வந்த ரஹானேவும் (8 ரன்) இதே போன்று ரோகித் சர்மாவினால் ரன்-அவுட் ஆக நேர்ந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் களம் புகுந்தார்.

ரோகித் சர்மா சதம்

இரு முன்னணி தலைகள் அடுத்தடுத்து உருண்டதால் இந்தியாவின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. இதற்கு மத்தியில் ரோகித் சர்மா தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக ரோகித் சர்மா 96 ரன்னில், எழும்பி வந்த பந்தை ‘அப்பர்-கட்’ செய்த போது எல்லைக்கோடு அருகில் நின்ற ஷம்சி எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். அந்த அதிர்ஷ்டத்தின் துணையுடன் ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் சதத்தை ருசித்தார்.

அணியின் ஸ்கோர் 236 ரன்களை (42.2 ஓவர்) எட்டிய போது ரோகித் சர்மா (115 ரன், 126 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) நிகிடியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னிடம் கேட்ச் ஆனார். அவருக்கு பிறகு வந்த ஹர்திக் பாண்ட்யா (0) அதே ஓவரில் தாழ்வாக வந்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் சிக்கினார்.

இந்தியா 274 ரன்கள்

இதனால் இந்தியாவின் ரன்ரேட் மேலும் குறைந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கு 30 ரன் (37 பந்து, 2 பவுண்டரி) எடுத்து நடையை கட்டினார். இறுதி கட்டத்தில் களம் கண்ட விக்கெட் கீப்பர் டோனி மிகவும் தடுமாறினார். முதல் ரன்னை எடுப்பதற்கே அவருக்கு 8 பந்து தேவைப்பட்டது. டோனியின் (13 ரன், 17 பந்து) விக்கெட்டையும் நிகிடி கபளகரம் செய்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் கேப்டன்ஷிப்பில் நிகிடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்தது. புவனேஷ்வர்குமார் 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது கவனிக்கத்தக்கது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நிகிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அம்லா அரைசதம்

அடுத்து 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி தடுமாறியது. கேப்டன் மார்க்ராம் 32 ரன்னிலும், டுமினி 1 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 6 ரன்னிலும், டேவிட் மில்லர் 36 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

33 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அம்லா (67 ரன்), விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் (11 ரன்) களத்தில் இருந்தனர்.