Templates by BIGtheme NET
Home » சற்று முன் » தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.328 கோடி கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்
Diwali-festive-liquor-sale-worth-Rs-328-crore

தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.328 கோடி கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்

சென்னை,

தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவது டாஸ்மாக் நிறுவனம். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.328 கோடி மது விற்பனை நடந்து இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது (2016, 2017) இந்த ஆண்டு கூடுதலாக விற்பனை ஆகி இருக்கிறது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த 6-ந் தேதி (நேற்று முன்தினம்) கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், அதற்கு முந்தைய நாளும் மது விற்பனையாவது தான் தீபாவளி பண்டிகை மது விற்பனையாக கணக்கில் எடுக்கிறோம்.

அந்த வகையில் தீபாவளிக்கு முந்தையநாள் (கடந்த 5-ந் தேதி) ரூ.148 கோடிக்கும், தீபாவளியன்று (கடந்த 6-ந் தேதி) ரூ.180 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ.328 கோடிக்கு மது விற்பனை நடந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.113 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.131 கோடிக்கும் என ரூ.244 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது. கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, 34.5 சதவீதம் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது.

அதேபோல், தீபாவளி பண்டிகைக்கு முந்தயை 3 நாட்களுடன் சேர்ந்து 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 3-ந் தேதி ரூ.124 கோடிக்கும், 4-ந் தேதி ரூ.150 கோடிக்கும், 5-ந் தேதி ரூ.148 கோடிக்கும், 6-ந் தேதி ரூ.180 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட மது விற்பனை அதிகமாக இருப்பது குறித்து டாஸ்மாக் கடை விற்பனை பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்ததாலும் பெரும்பாலான இளைஞர்கள் பொழுது போக்குக்காக மதுபிரியர்களாக மாறிவிட்டனர். இதனால் தான் இந்த ஆண்டு விற்பனை அதிகமாக இருந்தது’ என்றனர்.