Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » தி.மு.க. உள்பட20 கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்து : பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரள ஆலோசனை
Sonia-Gandhi-feast-to-leaders-of-20-parties-including-DMK

தி.மு.க. உள்பட20 கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்து : பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரள ஆலோசனை

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது. இதற்காக அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.

அதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி நேற்று தனது இல்லத்தில் விருந்து அளித்தார். அதில், காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அகமது பட்டேல், காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனிமொழி

தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), சதீஷ் சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), முகமது சலீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சுதீப் பந்தோபாத்யாயா (திரிணாமுல் காங்கிரஸ்), குபேந்தர் ரெட்டி (மதசார்பற்ற ஜனதாதளம்), தேஜஸ்வி யாதவ், மிசா பார்தி (இருவரும் ராஷ்டிரீய ஜனதாதளம்), அஜித்சிங் (ராஷ்டிரீய லோக்தளம்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதாதளம் அதிருப்தி) மற்றும் பாபுலால் மராண்டி, ஜிதன்ராம் மஞ்சி, பத்ராதின் அஜ்மல் உள்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆனால், மத்திய மந்திரிசபையில் இருந்து சமீபத்தில் விலகிய தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆலோசனை

இந்த கூட்டத்தில், வரும் மக்களவை தேர்தலில், பா.ஜனதாவை வீழ்த்த ஒரே அணியாக செயல்படுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆனால், இந்த விருந்துக்கு அரசியல் நோக்கம் கிடையாது என்று தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த விருந்து, அரசியலுக்காக நடத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகளிடையே நட்புறவு மற்றும் இணக்கத்துக்காக நடத்தப்பட்டது. நாடு எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும்போது, அதுபற்றி குடும்ப உணர்வுடன் விவாதிக்கவே விருந்து நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தை மத்திய அரசு நடத்த விடாததால், தேசநலன் சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.