Templates by BIGtheme NET
Arrested-in-connection-with-theft-cases

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில்,

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் வணிகர் தெருவை சேர்ந்தவர் ரதீஷ் (வயது 25). இவர், நேசமணிநகர், கோட்டார், வடசேரி, அஞ்சுகிராமம் ஆகிய 4 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடந்த 8 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். இவரை நேசமணிநகரில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மேற்கண்ட 4 போலீஸ் நிலைய பகுதிகளில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 151 பவுன் நகைகளையும், ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.

இவர் தொடர்ந்து திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

அதன்பேரில் ரதீசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று உத்தரவிட்டார். அதையடுத்து நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, ரதீசை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை ஜெயில் அதிகாரிகளிடம் காண்பித்து நாகர்கோவில் மாவட்ட ஜெயிலில் இருந்த அவரை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய ஜெயிலுக்கு கொண்டுபோய் அடைத்தார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரதீஷ் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

டிப்-டாப்பாக…

ரதீஷ், திருட்டு தொழிலை மிகவும் நேர்த்தியாக செய்து வந்துள்ளார். திருடர்கள் பொதுவாக ஆள் இல்லாத வீடுகளில் திருடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ரதீஷ் தனியாகச் சென்று ஆட்கள் இருக்கும் வீடுகளில்தான் திருடுவதையே தொழிலாக வைத்திருந்ததாக தெரிகிறது. அதற்கு காரணம் ஆள் இல்லாத வீடுகளில், அந்த வீட்டை சேர்ந்தவர்கள் தங்களது நகைகளை வங்கி லாக்கர் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். ஆட்கள் இருக்கும் வீடுகளில் நகைகள் மற்றும் பணம் இருக்கும் என்பதை தெளிவாக அறிந்திருந்த இவர் தனது கைவரிசையை காட்டி வந்தார்.

இதற்காக பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு வைத்துக் கொள்வாராம். தங்க நகைகளுடன் கவரிங் நகைகளை கலந்து வைத்திருந்தாலும் அதை ஒரு நொடியில் கண்டுபிடித்து தங்கநகைகளை மட்டும் திருடிச் செல்லும் ஆற்றல் கொண்டவர் எனவும், எந்த பூட்டையும் எளிதில் உடைத்து திருடுவதில் வல்லமை கொண்டவர் என்றும் போலீசாரால் கூறப்படுகிறது.

ஆனால் தான் செய்யும் திருட்டுத்தொழில் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிப்-டாப்பாக நடந்து கொள்வாராம்.

வட்டி தொழில்

திருடிய நகை- பணங்களில் இருந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்வதைப்போல் காட்டிக்கொள்வார். மேலும் ஆடம்பரமாக செலவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்துள்ளது. அவர்களுக்கும் அதிக பணம் செலவழிப்பாராம். இவரை தலைவராக கொண்டுள்ள இளைஞர்கள் பெரிய, பெரிய பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*