Home » கன்னியாகுமரி செய்திகள் » தமிழ், ஆங்கில மொழிகளில் தபால் துறை தேர்வை நடத்த வேண்டும்மக்கள்குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு
collector

தமிழ், ஆங்கில மொழிகளில் தபால் துறை தேர்வை நடத்த வேண்டும்மக்கள்குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்த கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 400 பேர் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தென்தாமரைகுளம் அருகே விஜயநகரியை சேர்ந்த சந்திரன் என்பவர் பாம்பு கடித்து இறந்ததற்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அவருடைய மனைவி ஜெயலதாவிடம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சமீப காலங்களில் மத்திய அரசின் ரெயில்வே துறை, தபால்துறை, இன்சூரன்ஸ் துறை, சுரங்கத்துறை போன்றவற்றில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தாமல், வடநாட்டு இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. தற்போது தபால் துறையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முழுவதும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுத கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனை மாநில அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்துக்கு உரிய செயலாகும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தபால்துறை தேர்வை நடத்த வேண்டும். அதன்படி தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழக குமரி மாவட்ட மகளிரணி துணை தலைவி குமாரிகலா தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நித்திரவிளை போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட விரிவிளை முதல் பள்ளிக்கல், கொல்லால் வரை உள்ள பகுதியில் அமைந்துள்ள அபாயகரமான வளைவு பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே இங்கு தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிச்சந்தை அருகில் உள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்த பத்மதாஸ் மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்,

மணவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வரவு-செலவு ஆவணங்களையும், திருத்தம் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையையும் ஆய்வு செய்து அதற்கு உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் மகாசபை கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வாணியக்குடி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், சைமன் காலனி ஊராட்சிக்கு உட்பட்ட வாணியக்குடியில் மக்கள் குடியிருப்பில் அமைந்திருக்கும் ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பாறையடி பகுதி தலித் மக்கள் வசிக்கும் பகுதியாகும். அங்குள்ள இடுகாட்டை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி ஒரு அதிகாரி அகற்ற முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.