சற்று முன்
Home » வர்த்தகம் செய்திகள் » தமிழனின் தலையில் கடன் சுமை: வருவாய் பற்றாக்குறை ரூ. 24,000 கோடியாக அதிகரிப்பு – காரணம் என்ன?
currency-tamilazhn

தமிழனின் தலையில் கடன் சுமை: வருவாய் பற்றாக்குறை ரூ. 24,000 கோடியாக அதிகரிப்பு – காரணம் என்ன?

சென்னை:

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.23,921 கோடியை எட்டுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் ரூ.6,431.17 கோடி அதிகமாகும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் கூறியுள்ளார்.

வருவாய் பற்றாக்குறை என்பது பட்ஜெட்டில் அந்த ஆண்டு மாநிலத்திற்கு எவ்வளவு வருவாய் வரும் என்பதை எதிர்பார்த்து திட்டமிட்ட தொகையைவிட, வந்த வருவாய் குறைவாக இருந்தால், அதுதான் வருவாய் பற்றாக்குறையாக கருதப்படுகிறது. 2010-2011ஆம் ஆண்டின் இறுதிக் கணக்கின்படி, மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை, ரூ.2,729 கோடியாக இருந்தது. நிதிப் பற்றாக்குறையின் அளவும், ரூ.16,647 கோடி ரூபாயாக, இருந்தது.

2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தின் தொடக்கத்தில் வருவாய் உபரியாக ரூ.1,364 கோடியாக இருந்தது. 2018-19 ஆண்டில் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,76,251.48 கோடி, மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.1,93,742.06 கோடியாக இருக்கும். இதனால், வருவாய் பற்றாக்குறை ரூ.17,490.58 கோடியாக இருக்கும் என பட்ஜெட் தாக்கலின் போது மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது இலக்கை விட பல ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு

2016-17 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.9,480 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆண்டின் இறுதியில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை சுமார் 70% அதிகரித்து ரூ.15,850 கோடியாக உயர்ந்தது. கடந்த சில ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மளமளவென உயர்ந்து தற்போது 23, 921 கோடியை எட்டுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பில் ஏமாற்றம்

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் இலக்கைக் காட்டிலும் மிக அதிகமான வேகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் கஜாபுயல் நிவாரண நிதி ஒதுக்கீடு, பல்வேறு துறைகளுக்கு புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஜிஎஸ்டி வருவாயின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.29,748.5 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் 25,666.1 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது தமிழக அரசின் எதிர்பார்ப்பில் 86 சதவிகிதம் மட்டுமே.

அரசின் மதிப்பீடு

பதிவு – முத்திரை வரி வருவாய் மூலமாக ரூ.10,935.5 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.7,242.28 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது தமிழக அரசின் எதிர்பார்ப்பில் 66.2 சதவிகிதம் மட்டுமே. நில வருவாய் மூலமாக ரூ.282.4 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதில் ரூ.100.8 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் எதிர்பார்ப்பில் 35.7 சதவிகிதம் மட்டுமே. மதிப்புக் கூட்டு வரிகளின் மூலமாக ரூ.44,427 கோடி ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.27,434.3 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. இது 61.8 சதவிகிதம் மட்டுமேயாகும்.

58 சதவிகிதம் குறைவு

அதேபோல சுங்க வரி மூலமாக 6,998 கோடி ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் ரூ.4,450 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது. ஒன்றிய வரிகளின் பங்கீட்டிலிருந்து ரூ.31,707 கோடி கிடைக்குமென்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் ரூ.17,380 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.1,76,252 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டு, அதைவிட 58.6 சதவிகிதம் குறைவாக ரூ.1,03,315.5 கோடி மட்டுமே தமிழக அரசு வருவாயாக ஈட்டியுள்ளது.

காரணம் என்ன?

வருவாய் குறைந்திருக்கும் வேளையில் செலவுகள் அதிகரித்துள்ளதும் மாநில அரசுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் பட்ஜெட் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததைக் காரணமாகக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை ஒன்றிய அரசு உரிய காலத்தில் இன்னும் ஒதுக்காமல் இருப்பதும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய்கள் குறைந்திருப்பதும் வருவாய் பற்றாக்குறை உயர்வுக்கு மற்ற காரணங்களாக உள்ளன.

அதிக செலவு

இந்த நிலையில் வருவாய் பற்றாக்குறை ரூ.23,921 கோடியை எட்டுமென்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘எதிர்பாராதவிதமாக கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய ரூ.2,298.25 கோடியைச் செலவு செய்ய நேர்ந்தது. இந்த கஜா புயல் பேரழிவையும், பெரும் சேதத்தையும் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப் போதுமான நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் சுமையைக் குறைக்க ரூ.998.29 ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் டீசல் விலை உயர்வைக் கண்ட நேரத்தில் அதனைச் சரிக்கட்ட மட்டும் ரூ.198.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதிகள் ஒதுக்கீடு

கோயில் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3,087 கோயில்களில் சிலைகள் திருட்டைக் கட்டுப்படுத்த எச்சரிக்கை ஒலி எழுப்பும் மணி மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.309 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.149.54 கோடியும், கூட்டுறவுத் துறைக்குக் கூடுதலாக ரூ.259.39 கோடியும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ரூ.396 கோடியும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நிதிப்பற்றாக்குறை

தென் மாநிலங்களில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு கூறியிருந்தது. வருவாய் பற்றாக்குறையில் மட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகம் தள்ளாடுகிறது. நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பரிசுகள் தேவையா

2018-19ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என்று கூறியிருந்தால் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். ஏற்கனவே வருவாய் பற்றாக் குறையால், நிதிப்பற்றாக்குறையால் தமிழகம் தள்ளாடும் நிலையில் மேலும் ஒரு சுமையை ஏற்படுத்தும் வகையில் ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்து வருகின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்.