Home » தமிழகச் செய்திகள் » தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு எடப்பாடி பழனிசாமி பேச்சு
Edappadi-Palanisamy-Talk

தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பா.ம.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த 1,400 பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் கட்சி

இன்றைக்கு மக்களுடைய பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. ஒன்று தான். மற்ற கட்சிகள் எல்லாவற்றிலும் குடும்ப அரசியல் தான் தலைதூக்கி இருக்கும். தி.மு.க.வை எடுத்துக் கொண்டால், கருணாநிதி வந்தார், மு.க.ஸ்டாலின் வந்துவிட்டார், பிறகு உதயநிதி வரப்போகிறார்.

ஏற்கனவே, தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கின்றபொழுதே, அவருடைய மகள் கனிமொழிக்கு எம்.பி. பதவி கொடுத்து வைத்திருந்தார். தயாநிதிமாறன், மு.க.அழகிரி என்று எல்லோருமே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பதவிக்கு வர முடிந்தது. ஆனால், அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய கட்சி.

மக்களுக்கான இயக்கம்

தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, ஆளுகின்றன. ஆனால், ஆளக்கூடிய கட்சியிலே சிறந்த கட்சி என்று சொன்னால், அது அ.தி.மு.க. ஒன்றாகத் தான் இருக்க முடியும். இது மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்.

எதிர்க்கட்சிகள் எல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பார்த்தீர்களானால், மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஊராட்சியாக சென்று ஊராட்சிக் கூட்டம் போடப் போயிருக்கின்றார். இவர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக இருந்தவர்.

அப்பொழுதெல்லாம் கிராமத்துக்கு சென்று பார்க்காதவருக்கு இப்பொழுதுதான் ஞாபகம் வந்திருக்கிறது. அப்பொழுதே போயிருந்தால் குறைகளை தீர்த்திருக்கலாம். அந்த வாய்ப்பு அவரிடம் இருந்தது. எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்கு என்ன வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் கிராமத்தை நன்கு உணர்ந்தவர்கள்.

மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள்

கிராமத்தையே பார்க்காதவர் மு.க.ஸ்டாலின். ஏனென்றால், இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். அதனால் கிராமத்தை பார்க்கவே முடியவில்லை. அதனால், கிராமத்தில் இருக்கின்ற பிரச்சினையை இவர் தெரிந்துகொள்ள முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது எல்லா கூட்டத்திலும் பேசினார். தண்ணீரை நாங்கள் கொடுத்திருக்கலாம், மின்சார வசதி செய்து கொடுத்திருக்கலாம், கழிவுநீர் அகற்றும் வசதி செய்து கொடுத்திருக்கலாம். அடிப்படை தேவைகள் செய்வதை எல்லாம் செய்வது உள்ளாட்சி அமைப்பு. நாங்கள் அதை மறுக்கவில்லை.

அந்த அதிகாரத்தை மக்கள் உங்களிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். பதவியில் இருக்கும் போதெல்லாம் விட்டுவிட்டு, இப்பொழுது கிராமத்தில் இருந்துதான் அரசியலே தொடங்குகிறது என்று புது கண்டுபிடிப்பு கண்டு பிடித்திருக்கிறார். மக்களுடைய பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள்.

தடை செய்தது தி.மு.க.

மு.க.ஸ்டாலின் எல்லா கூட்டத்திலும், அ.தி.மு.க. அரசு தான் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்ததை போன்று பேசி, ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்களுக்கு எல்லாம் நன்மை கிடைக்கவில்லை. திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று தவறான செய்தியை சொல்கிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த காலத்திலேயே உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, பணிகள் துவங்கப்பட்டிருந்த காலத்தில் தி.மு.க. தான், நீதிமன்றத்தில் தடையாணை வாங்கிவிட்டார்கள். தடை செய்தது தி.மு.க. தான்.

இதையெல்லாம் இன்று சொல்வதற்கு காரணம், வேண்டும் என்றே திட்டமிட்டு, அ.தி.மு.க. மீது, ஒரு தவறான செய்தியை மக்களிடத்திலே பரப்பி, அரசியல் ரீதியாக சந்திக்க முடியாததை, கொல்லைப்புறத்தின் வழியாக மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் இன்றைக்கு தி.மு.க.வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அத்தனை கட்சிகளையும் கூவிக்கூவி, நீ வா, நீ வா என்று அழைத்து இன்றைக்கு கூட்டணி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாருக்கு ஆதரவு?

எங்களை பொறுத்தவரைக்கும், யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அவர்களைத் தான் நாங்கள் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-

காலம் நம் முன்னே பல பணிகளை வைத்திருக்கிறது. 20 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் எதிர் நிற்கிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை இன்னும் சில மாதங்களில் எதிர்கொள்ள இருக்கிறோம்.

களம் எதுவாயினும், களம் காணும் போர் எதுவாயினும், எதிர்த்து நிற்கும் படை எதுவாயினும், அதனை வெற்றி கொள் கின்ற ஆற்றல், அ.தி.மு.க.வுக்கு உண்டு. எம்.ஜி.ஆரின் அன்பும், ஜெயலலிதாவின் ஆசியும், அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் மக்கள் சக்தியும், அயராத உழைப்பை நல் கும் தொண்டர் சக்தியும், அ.தி.மு.க.வுக்கு வெற்றியை கட்டாயம் பெற்றுத் தரும்.

ஒற்றுமையாய் களத்தில் நின்று ஓய்வறியா உழைப்பை நல்கி வெற்றிக் கனியை ஈட்டுவோம். அந்த வெற்றிக் கனியை, வங்கக் கடலோரம் கண்ணுறங்கும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொன்னடிகளில் நன்றிக் கடனாய் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், எம்.சி.சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.