Home » விளையாட்டுச்செய்திகள் » டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்
TNPL-Cricket-Final-match-Dindigul-dragons

டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்

நத்தம்,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நத்தத்தில் (திண்டுக்கல்) நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் டி.ரோகித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜெகதீசனும், ஹரி நிஷாந்தும் களம் புகுந்தனர். முதல் பந்தை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஹரி நிஷாந்த் அட்டகாசமாக ரன் கணக்கை தொடங்கினார். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக தென்பட்டதால் எதிரணியின் பந்து வீச்சை எளிதில் அடித்து நொறுக்கிய திண்டுக்கல் பேட்ஸ்மேன்கள் ‘பவர்- பிளே’யான முதல் 6 ஓவர்களில் 67 ரன்களை திரட்டினர்.

அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடி ஸ்கோர் 90 ரன்களை (9.1 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களில் (31 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த விவேக்கும் பட்டையை கிளப்பினார். சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர், எந்த பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. இதற்கிடையே ஜெகதீசன் 43 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். மறுமுனையில் மதுரை பவுலர்களை திக்குமுக்காட வைத்த விவேக் அரைசதத்தை கடந்து 54 ரன்களில் (25 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார்.

திண்டுக்கல் அணியின் ரன்ரேட் விகிதம் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் 19-வது ஓவரில் மட்டும் அந்த அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் திண்டுக்கல் அணி 200 ரன்களை தொடுமா? என்ற கேள்விகுறி எழுந்தது. ஆனால் இறுதி ஓவரில் ஆர்.ரோகித் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி 200 ரன்களை கடக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ரோகித் 13 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த சீசனில் ஒரு அணி 200 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய மதுரை பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முயற்சித்து மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். திண்டுக்கல் பீல்டர்கள் சில கேட்ச்சுகளை மிக அற்புதமாக பிடித்து அசத்தினர். அபிஷேக் தன்வாரை (28 ரன்) தவிர்த்து வேறு யாரும் அந்த அணியில் 20 ரன்களை கூட தொடவில்லை. இந்த சொதப்பலில் நட்சத்திர வீரர்கள் அருண் கார்த்திக் (11 ரன்), தலைவன் சற்குணம் (8 ரன்) ஆகியோரும் அடங்குவர். மதுரை அணி 19.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, முதல்முறையாக இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. திண்டுக்கல் தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளும், திரிலோக் நாக், அபினவ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். திண்டுக்கல் வீரர் விவேக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி அடைந்தாலும் மதுரை அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற கோவையுடன் மோத இருக்கிறது.

கருணாநிதி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தள்ளி வைக்கப்பட்ட டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் நத்தத்தில் நேற்று நடந்தது. முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு முன்பு வீரர்கள் அனைவரும், கருணாநிதியின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், டி.என்.பி.எல். அலுவலர்கள் அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து துக்கம் அனுசரித்தனர். இதைத்தவிர வழக்கமாக போட்டியின் போது அரங்கேறும் சியர்ஸ் லீடர்சின் நடனம், சினிமா பாடல்கள் ஒலிபரப்புதல் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.