Templates by BIGtheme NET
Home » சற்று முன் » ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி
Junior-World-Cup-football-tournament

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி

மும்பை,

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்து திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கால்பந்து விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ‘மிஷன் 11 மில்லியன்’ என்ற திட்டத்தை தொடங்கி கால்பந்து போட்டிகளை நடத்தியது.

இதில் நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மிஷன் 11 மில்லியன் அமைப்பு சார்பில் 11 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) மாணவர்களில் ஒரு மில்லியனுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் தற்போது நடந்து வரும் ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கிய கடந்த 6-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியின் கையில் இருந்து கால்பந்தை பெற்று மைதானத்தில் கொண்டு சென்று சேர்க்கும் பணியை மேற்கொண்டனர்.

இதில் பிரதமர் மோடியின் கையில் இருந்து கால்பந்தை பெற்ற வாய்ப்பு மும்பையை சேர்ந்த இருதய மேரி என்ற தமிழ் மாணவிக்கும் கிடைத்தது. இந்த வாய்ப்பை பெற்ற மாணவி இருதய மேரி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மும்பை கிங்சர்க்கிள் பாரதிய இந்திரா நகரில் உள்ள குடிசை வீட்டில் தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வருகிறார். தந்தை பிரகாஷ். சென்னை மாம்பலத்தை சேர்ந்தவர்.

அவர் மும்பை மாநகராட்சியில் துப்புரவு பணியை செய்யும் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். பிரகாசுக்கு இருதய மேரியுடன் சேர்த்து மூன்று மகள்கள். இவர்களில் இரண்டாவது மகள் தான் இருதய மேரி.
மாணவி இருதய மேரி தாராவி பி.எம்.ஜி.பி. காலனியில் உள்ள சத்ரபதி சிவாஜி வித்யாலயா மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சிறந்து விளங்கும் இருதய மேரி கால் பந்து விளையாட்டிலும் சிறப்பாக செயல்படுகிறார்.

மிஷன் 11 மில்லியன் அமைப்பு சார்பில், அந்தேரியில் நடந்த கால்பந்து போட்டியின் போது தான், இருதய மேரியின் சிறப்பான விளையாட்டு திறனை பார்த்து மிஷன் 11 மில்லியன் குழு அவரை மராட்டியத்தின் சார்பில் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பியது.

இந்த அனுபவம் பற்றி மாணவி இருதய மேரி கூறியபோது, “ பிரதமர் மோடியிடம் இருந்து கால்பந்தை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அது நிறைவேறும் என நம்புகிறேன். இந்திய பெண்கள் கால்பந்து அணிக்காக விளையாட மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.