Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » ஜிஎஸ்டியால் விழி பிதுங்கும் நடுத்தர வர்க்கம் ஓட்டல் உணவுக்கு குட் பை சொல்வோர் அதிகரிப்பு
kumariexpress_news_GST

ஜிஎஸ்டியால் விழி பிதுங்கும் நடுத்தர வர்க்கம் ஓட்டல் உணவுக்கு குட் பை சொல்வோர் அதிகரிப்பு

நாகர்கோவில் : ஜிஎஸ்டியால் விலைவாசி குறையும் என்று மத்திய அரசு கூறி வந்தபோதிலும் எந்த பொருளுக்கு எவ்வளவு விலை குறைந்தது என்பதைவிட விலையேற்றமே பூதாகரமாகி நடுத்தர வர்க்கம் விழி பிதுங்கிட வைத்துள்ளது. தங்கத்திற்கு 3 சதவீதமும், ஓட்டல் உணவுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டியில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டலுக்கு உணவு சாப்பிட செல்கின்றவர்கள் பில் கிடைக்கும்போது பெருமூச்சுவிட வைக்கின்ற நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வருவாய் உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரூ.20 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை வருவாய் உள்ள ஓட்டல்கள், உணவு நிறுவனங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி. அதாவது தினசரி ரூ.20 ஆயிரம் வரை விற்பனை நடைபெறுகின்ற உணவு விடுதிகளுக்கு இந்த வரி செலுத்த வேண்டும் என்பதாகும். தமிழகத்தில் பெரும்பாலான ஓட்டல்கள் இந்த பட்டியலுக்குள் வந்துவிடுகிறது. 5 சதவீதம் வரி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யக்கூடாது. ஓட்டல் நிர்வாகம் சுயமாக அதனை செலுத்த வேண்டும். அதாவது ரூ.20 ஆயிரம் வருவாய் உள்ள ஓட்டல் நிர்வாகம் அதில் ரூ.1000 தினசரி சுய வருமானத்தில் இருந்து ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும்.

அந்த வகையில் ஒரு மாதம் செலுத்த வேண்டிய தொகை ரூ.30 ஆயிரம் ஆகிறது. இதன் காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அதனை போன்று ஆண்டு விற்பனை வருவாய் ரூ.75 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ள ஏசி இல்லாத ஓட்டல்கள் 12 சதவீதம் ஜிஎஸ்டி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து செலுத்த வேண்டும். ஆனால் அந்த ஓட்டலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏசி இருந்தால் ஜிஎஸ்டி அளவு 18 சதவீதம் ஆக உயரும். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ.1000க்கு உணவு சாப்பிடும் போது ரூ.180 ஜிஎஸ்டி பட்டியலில் சேர்ந்துவிடும். ஓட்டலில் ஒரு பகுதியில் ஏசி இருந்து மற்றொரு பாகத்தில் உள்ள ஏசி இல்லாத அறையில் அமர்ந்து உணவு உட்கொண்டாலும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தப்படுகிறது. இதனால் ரெஸ்டாரன்ட்கள், ஓட்டல்களுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

ஜிஎஸ்டியில் கார், வீட்டு உபயோக பொருட்கள், செல்போன், மருந்து வகைகளுக்கும் கூடுதல் தொகையை மக்கள் செலுத்த ேவண்டிய கட்டாயம் உள்ளது. ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்கள் (எஸ்யுவி)க்கு ஜிஎஸ்டிக்கு பிறகு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது. சொகுசு கார்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலை உயர்வு ஆகும். சிறிய கார்களுக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் வரை விலை குறைவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்களுக்கு 1 சதவீதம் ஜிஎஸ்டியில் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கலால்வரி, வாட் ஆகியன சேர்த்து 27 சதவீதம் ஆக இருந்ததால் ஜிஎஸ்டி காரணமாக அது 28 சதவீதம் ஆக உள்ளது. இதன் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் விலையில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை. அதே வேளையில் சில பொருட்களுக்கு ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது.

செல்போன் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள போட்டிகாரணமாக செல்போன்களுக்கு அடிப்படை விலையை குறைத்து ஜிஎஸ்டியின் பலனை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளன. அதனால் விலையில் மாற்றமில்லை. ஆனால் பழைய போன்கள் மாறி புதிய போன்கள் வரும்போது அதற்கு வழக்கமாக உள்ள விலையேற்றம் தொடர்கிறது. ஜிஎஸ்டிக்குள் வராத பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.58 ஆகவும், டீசல் ரூ.62.42 ஆகவும் (20ம் தேதி நிலவரம்) விற்பனை செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர் விலை மானியம் திரும்ப பெறும் பிரிவில் ரூ.599.50ல் இருந்து ரூ.674.50 ஆகவும் உயர்ந்துள்ளது. மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.471ல் இருந்து ரூ.481 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றமும், ஜிஎஸ்டியும், அனைத்துவிதமான பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.