Templates by BIGtheme NET
howala-money

சூடுபிடிக்கிறது ஹவாலா பணம் கடத்தல் விவகாரம் கைதான 4 பேர் சிறையிலடைப்பு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

எஸ்ஐயை தாக்கிவிட்டு ரூ.2 கோடி ஹவாலா பணம் கடத்திய வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். களியக்காவிளை அருகே கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளையில் வைத்து பைக்கில் ரூ.2 கோடி ஹவாலா பணத்துடன் சென்ற வாலிபர்களில் ஒருவரை புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் கடந்த 7ம் தேதி மடக்கி பிடித்தார். ஒருவர் தப்பி ஓடினார். இந்நிலையில் 2 பைக்குகளில் வந்த 4 பேர், ராபர்ட் ஜெயினை தாக்கிவிட்டு பணத்துடன் வாலிபரையும் மீட்டு சென்றனர். இது தொடர்பாக ராபர்ட் ஜெயின், பாறசாலை போலீசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து தப்பியோடிய வாலிபர்கள் மீது போலீசை தாக்கி கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அவர்கள் இடிச்சக்கபிலாமூடு பகுதியை சேர்ந்த அசீம்(26), பீர்முகம்மது(27), பெரோஸ்கான்(25), அஜீப்(26) என தெரியவந்தது. இதில் அசீம் பைக்கில் ஹவாலா பணத்துடன் வந்ததும், மற்றவர்கள் எஸ்ஐயை தாக்கிவிட்டு பணத்துடன் அசீமை மீட்டு சென்றவர்களில் முக்கியமானவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாறசாலை போலீசார் அசீம் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், ஹவாலா பணத்தை நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த அல்அமீன் என்பவரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அல்அமீனை தேடி நெய்யாற்றின்கரை சென்றனர். இதுபற்றி அறிந்த அல்அமீன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
விசாரணையின் போது அசீம் கூறியது: இந்த பணத்தை வாங்க என்னை நாகர்கோவில் பஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினார்கள். அதன்படி நான் சென்றேன். அங்கு பண பையுடன் தயாராக நின்று கொண்டிருந்த ஒருவர் அதை என்னிடம் தந்தார். பையை நெய்யாற்றின்கரையில் உள்ள அல் அமீனிடம் ஒப்படைத்துவிடும் படி கூறினார். நெய்யாற்றின்கரையில் அவர் இருக்கும் இடம் குறித்த தகவலையும் தெரிவித்தார்.

இதற்காக எனக்கு கூலி மட்டும் வழங்கப்படும். கூலி தொகைக்காகத்தான் இதை செய்தேன். பணம் எங்கிருந்து வந்தது? எங்கு செல்கிறது? என்பதெல்லாம் எனக்கு தெரியாது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்ற 3 ேபரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், நாங்கள் 3 பேரும் அசீமின் நண்பர்கள். அவர் தனக்கு ஒரு பிரச்னை இருப்பதாகவும், தன்னை ஒருவர் துரத்தி வருவதாகவும் குழித்துறையில் இருந்து போனில் பேசினார். எனவே நண்பனை காப்பாற்றவே நாங்கள் இடிச்சக்கபிலாமூட்டில் இருந்து பைக்கில் களியக்காவிளை நோக்கி வந்தோம். நண்பனை துரத்தியது எஸ்ஐயா? தனிநபரா? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்துதான் ஹவாலா பணம் கைமாறி இருக்கிறது. ஆகவே இதன் பின்னணியில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்து இருக்கிறது. அந்த பிரமுகர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதே போல் பலமுறை பணம் கடத்தப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.

கடத்தப்பட்ட ஹவாலா பணம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கும் ஒரு கும்பலுக்கு சென்றிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கைதான 4 பேரையும் நேற்று பாறசாலை போலீசார் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எஸ்ஐக்கு தகவல் கிடைத்தது எப்படி?
நாகர்கோவிலில் ஒருவர் மூலம் அசீம் என்பவரிடம் ஹவாலா பணம் கொடுத்தனுப்பும் தகவலும், பைக் நம்பர் உள்பட வாலிபரின் அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்களை ஹவாலா கும்பலில் போட்டி அணியினர் மூலம் புதுக்கடை எஸ்ஐ ராபர்ட் ஜெயினுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அடிப்படையிலேயே குழித்துறையில் அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் எஸ்ஐ ஈடுபட்டார். ஆனால் அவரை பிடிக்க முடியாததால் இஞ்சிவிளை வரை விரட்டி சென்றுள்ளார். எனவே எஸ்ஐக்கு தகவல் கொடுத்த போட்டி அணியினர் குறித்த தகவல்களை சேகரிக்கவும் கேரள போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

திசை திருப்ப முயற்சி?
இடிச்சக்கபிலாமூடு பகுதியை சேர்ந்த அசீமின் உறவினர்கள் நேற்று மாலை பாறசாலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், இடிச்சக்கபிலாமூடு பகுதியை சேர்ந்த அசீம் களியக்காவிளை மீன் மார்க்கெட்டில் இருந்து கமிஷன் ஏஜெண்டுகளிடம் திரட்டிய சுமார் ரூ.10 லட்சம் பணத்தை விழிஞ்ஞம் பகுதியில் உள்ள மீன் மொத்த வியாபாரிகளுக்கு கொடுப்பதற்காக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். இஞ்சிவிளை அருகே சென்ற போது அந்த பைக்கை சைகை காட்டி நிறுத்திய ஒருவர், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்த தகவல்கள் வேண்டுமென்றும் கேட்டு அசீமை தாக்கி உள்ளார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கூறி உள்ளனர். இது இந்த வழக்கை திசை திரும்பும் முயற்சியாகத்தான் இருக்க வேண்டுமென போலீசார் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*