Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » சிக்கன் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்வதா? காங்.தலைவர் ராகுலுக்கு பாஜக கண்டனம்
BJP-slams-Rahul-for-visiting-temple-after-eating-chicken

சிக்கன் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்வதா? காங்.தலைவர் ராகுலுக்கு பாஜக கண்டனம்

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி கர்நாடகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக சுற்றுப்பயணத்தின் போது இந்து கோவில்களுக்கு மட்டுமே ராகுல்காந்தி சென்று சாமி தரிசனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் ராய்ச்சூரில் உள்ள மசூதிக்கு சென்று ராகுல்காந்தி வழிபட்டார்.

பின்னர் அங்கிருந்து தேவதுர்காவுக்கு ராகுல்காந்தி புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில், சாலையோரம் இருந்த டீ கடையில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டார்.ராகுல்காந்தி ஓட்டலுக்கு வந்திருப்பது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் அவரை பார்க்க திரண்டு வந்திருந்தனர். அவர்களிடம் பேசிய ராகுல்காந்தி கர்நாடக அரசின் திட்டங்கள் பற்றியும், சாதனைகள் பற்றியும் எடுத்து கூறினார்.

முன்னதாக நேற்று, ராகுல் காந்தி ஜவாரி சிக்கன் என்ற அசைவ உணவு வகையை சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு சென்றதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ள எடியூரப்பா, ஒரு புறம் முதல்வர் சித்தராமையா மீன் சாப்பிட்டுவிட்டு தர்மஸ்தலா மன்ஜூனாதா கோவிலுக்கு செல்கிறார். மற்றொரு பக்கம், ராகுல் காந்தி, ஜவாரி சிக்கன் சாப்பிட்டு விட்டு நரமசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்துக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து காயப்படுத்துகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு முதல் மந்திரி சித்தராமையா, மதிய உணவுடன் மீன் சாப்பிட்டு விட்டு மன்ஜூனாதா கோவிலுக்கு சென்று வழிபட்டதாக புகார் எழுந்தது. கோவிலின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் சித்தராமையாவின் செயல்பாடு இருப்பதாக கூறி அப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டன. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை சித்தராமையா நிராகரித்தார்.