Home » தமிழகச் செய்திகள் » சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் அமைச்சர் வலியுறுத்தல்

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் அமைச்சர் வலியுறுத்தல்

1-8-2022 அன்று நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவைகள் வரி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் ஆகியவை குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். இதுகுறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி வந்தது. இதனால், மத்திய அரசுக்கு வருவாய் பல லட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும், அதற்கேற்ப, மாநில அரசுகளின் வருவாய்களில் உயர்வு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய கலால் வரியை குறைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பு சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த வரி விதிப்பின் முடிவு 3 கட்டங்களில் எடுக்கப்பட்டது. 3-வது கட்டம், அதாவது சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் கூட்டத்தில்தான் வரி விதிப்பிற்கான பரிந்துரைகள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

விவாதத்திற்குப்பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த 56 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரிவிதிப்பு குறித்து 3 கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனே குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவில் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.21 சதவீதம் மற்றும் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.16 சதவீதம். ஆனால், மத்திய வரிகளில் இருந்து நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதோ வெறும் 4.079 சதவீதம் மட்டுமே. தொடர்ந்து வந்த நிதிக்குழுக்களால் தமிழ்நாட்டிற்கு நிதி பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை, உரிய பங்கு தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயை பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே, சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதை பயன்படுத்தி, மத்திய அரசு வரிச்சுமையை குறைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.