Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » சமூக விரோத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பு? கண்டக்டர் இல்லாத பஸ்கள் பாதுகாப்பற்ற பயணமாக அமையும்
Who-is-responsible-for-anti-social-activities-Busless-buses-are-unprotected

சமூக விரோத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பு? கண்டக்டர் இல்லாத பஸ்கள் பாதுகாப்பற்ற பயணமாக அமையும்

நாகர்கோவில்,

கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சமீபத்தில் புதிய பஸ்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு, முதற்கட்டமாக 30 புதிய பஸ்கள் வந்தன. இவற்றில் 20 புதிய பஸ்கள் நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கத்துக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்தாலே அரசு போக்குவரத்து கழகத்தை லாபத்தில் இயக்க முடியும். மாறாக தொழிலாளர்களை குறைக்க போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர். கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்களுக்கு, காலை மற்றும் மாலை வேளையில் டிக்கெட் எடுக்க வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளன. இது ஒருபுறமிருக்க இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள் இன்னும் இயங்க வில்லை. கண்காணிப்பு காமிராக்கள், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட வில்லை. பயணிகளே கதவுகளை மூட வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் அரசு ேபாக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது :கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்குவதன் மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. கண்டக்டர் இல்லாததால் ஓடும் பஸ்சில் மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற செயல்கள் நடந்தால் யார் கண்காணிக்க முடியும். பஸ்களில் சமூக விரோத கும்பல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் அவர்கள் யாரிடம் புகார் அளிப்பார்கள். கண்டக்டர் இல்லாததால், போக்குவரத்து நெரிசல்களில் பஸ்களை பக்கவாட்டில் பார்த்து செல்ல ஆள் இருப்பதில்லை. இதனால் விபத்துக்களோ, பஸ்சுக்கு சேதமோ? ஏற்பட்டால் டிரைவரை தான் நிர்வாகம் பலிகடா ஆக்கும். போக்குவரத்து துறை என்பது பொதுமக்களின் சேவை மற்றும் பாதுகாப்பு என்கிற நோக்கில் செயல்படும் ஒரு பொது சேவை நிறுவனம். இதில் பயணிகளின் நிறைவான மற்றும் பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்வதே போக்குவரத்து கழகங்களின் கடமை ஆகும்.

ஒரு பள்ளி பஸ்சில் கூட ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. என்ட் டூ என்ட் பஸ்கள் 20 பஸ்கள் ஒரு நாளைக்கு இயங்குகின்றன. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்வதும், வருவதுமாக சேர்த்து ஒரு பஸ் 10 டிரிப் செல்ல வேண்டும். அந்த வகையில் 200 டிரிப் வருகிறது. ஒரு டிரிப்புக்கு 50 பயணிகள் வீதம், 200 டிரிப்புக்கு 10 ஆயிரம் பயணிகள் செல்கிறார்கள். இந்த 10 ஆயிரம் பயணிகளின் பயணத்துக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? கண்டக்டர் இல்லாததால் இது பாதுகாப்பற்ற பயணமாகவே அமைகிறது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு கண்டக்டர் இல்லாத பஸ்கள் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.