Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » சத்தீஷ்காரில் பயங்கரம் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 துணை ராணுவ வீரர்கள் பலி : பிரதமர் மோடி அனுதாபம்
Chhattisgarh-9-CRPF-personnel-killed-in-Sukma-Naxal-attack

சத்தீஷ்காரில் பயங்கரம் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 துணை ராணுவ வீரர்கள் பலி : பிரதமர் மோடி அனுதாபம்

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்களின் வாகனத்தை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் 9 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். அவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்து உள்ளார்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம்

நமது நாட்டில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்று, சத்தீஷ்கார். இங்கு அடர்ந்த காடுகளில் பதுங்கி இருந்து கொண்டு, அவ்வப்போது வெளியே வந்து நாச வேலைகளில் ஈடுபட்டு, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துவது நக்சலைட்டுகளின் வாடிக்கையாக அமைந்து உள்ளது.

நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கூட்டு நடவடிக்கைகள் போதுமான வெற்றி தரவில்லை. இதனால் நக்சலைட்டுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு

இந்த நிலையில், அங்கு சுக்மா மாவட்டத்தில், நேற்று மதியம் 12.30 மணி அளவில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்), புதிதாக பாலோடி என்ற இடத்தில் திறக்கப்பட்டு உள்ள சோதனைச்சாவடிக்கு பணி ஏற்பதற்காக கண்ணிவெடி தடுப்பு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அவர்களின் வாகனம், கிஸ்தாராம்-பாலோடி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, நக்சலைட்டுகள் ரகசியமாக புதைத்து வைத்து இருந்த சக்தி வாய்ந்த (ஐ.இ.டி.) குண்டுகள் வெடித்தன. இதில் அந்த வாகனம் 10 அடி உயரத்துக்கு பறந்து, கவிழ்ந்து பெருத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த வீரர்கள், வாகனத்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

9 வீரர்கள் பலி

அவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும், மத்திய ஆயுதப்படை போலீசின் 212-வது படைப்பிரிவினர் ஆவார்கள்.

படுகாயம் அடைந்த 2 வீரர்களும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் விமானத்தில் ராய்ப்பூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர். மேலும், அங்கு நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நக்சலைட்டுகள் பயன்படுத்திய சக்தி வாய்ந்த (ஐ.இ.டி.) வெடிகுண்டுகள் 50 கிலோ எடை கொண்டவை என தெரிய வந்து உள்ளது.

மோடி அனுதாபம்

இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு உள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் அனுதாபம் தெரிவித்து உள்ளார். மாநில முதல்-மந்திரி ராமன் சிங்கையும் அவர் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி இதே பகுதியில் பேஜி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 12 படைவீரர்கள் பலியானதும், அதற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நடந்த மற்றொரு தாக்குதலில் 25 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்ததும் நினைவுகூரத்தக்கது.