ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில போலீசாரும், இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குக்தாஜ்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று 5 நக்சலைட்டுகள் சரண் அடைந்து உள்ளனர். மேலும் நக்சலைட்டுகளின் ஆதரவாளர்கள் 18 பேரும் சரண் அடைந்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள்.
இதுகுறித்து நாராயண்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜிதேந்திரா சுக்லா கூறுகையில், ‘சரண் அடைந்த நக்சலைட்டுகள் கடந்த ஓராண்டாக போலீசாருடன் தொடர்பில் இருந்து வந்தனர். தங்களது எதிர்கால வாழ்க்கைக்காக தற்போது சரண் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.