பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
568787

கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 2 விமானிகள் உள்பட 17 ஆக அதிகரித்துள்ளது. 110 பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமான விபத்தில் விமானத்தின் கேப்டன் தீபக் சாத், துணை விமானி அகிலேஷ் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கேப்டன் தீபக் சாத், இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”கரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் மிஷன் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி துபாயிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் போயிங் 737, ஐஎக்ஸ் 1344 எண் கொண்ட விமானம் கோழிக்கோடு நகருக்கு இயக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 பைலட்கள் என 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு நகரில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்துவருவதால் விமான நிலையத்தில் தண்ணீர் இருந்தது.

விமான நிலையம் டேபிள்டாப் என்ற வடிவத்தில் சற்று மேடாக அமைக்கப்பட்டு இருந்தது. துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு சரியாக 7.41 மணிக்குத் தரையிறங்கியது. அப்போது விமானம் விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாகப் பிளந்தது. ஓடுதளத்தில் மழை நீர் இருந்ததாலும், மழை பெய்ததாலும் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது எனக் கூறப்படுகிறது.

இந்த விமான விபத்து ஏற்பட்டபோது எந்தவிமான தீ விபத்தும் ஏற்படவில்லை, விமானம் இறங்கும்போது தீயும் பிடிக்கவில்லை. இருப்பினும், உடனடியாக விமான நிலையத் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று விமானம் தீப்பிடிக்காத வகையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.

பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் என உள்ளூர் மக்கள் அனைவரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் படுகாயங்களுடன் ஏராளமான பயணிகள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரு விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பல பயணிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பலியான பயணிகளின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை நடத்தி வருகிறோம். அனைத்துப் பயணிகளும் மீட்கப்பட்டுவிட்டனர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் 7 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானப் பயணிகளுக்கு உதவவும், உறவினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் கோழிக்கோடு, ஷார்ஜா, துபாய் போன்ற நகரங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து அறிந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “கோழிக்கோடு விமான விபத்து குறித்துக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இரு விசாரணைக் குழுக்களை அமைத்துள்ளது. இந்த இரு குழுக்களும் நேற்று கோழிக்கோடு நகருக்குப் புறப்பட்டுவிட்டனர். இன்று விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தும்.

கடந்த 2010-ம் ஆண்டு, மே 22-ம் தேதி மங்களூரு விமான நிலையத்தில் இதேபோன்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐஎக்ஸ் 812 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 158 பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.