Home » கன்னியாகுமரி செய்திகள் » கோதையாறுக்கு சுற்றுலா வந்த போது பரிதாபம், ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
College-students-are-immersed-in-the-river-3-killed

கோதையாறுக்கு சுற்றுலா வந்த போது பரிதாபம், ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

குலசேகரம்,

கேரள மாநிலம் பாறசாலை அருகே உதயன்குளங்கரை, பிலாமூட்டுக்கடையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் வெள்ளையாணி அரசு வேளாண்மை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் சாந்தணு, அருள்மோகன் ஆகியோரும் படித்து வந்தனர். மாணவர்கள் 3 பேரும் நேற்று 2 மோட்டார் சைக்கிள்களில் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கோதையாறு பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கோதையாறு நீர் மின் நிலையத்தை சுற்றி பார்த்தனர். பின்பு, கோதையாறு மார்க்கெட் பகுதியில் ஆற்றில் குளிக்க இறங்கினர்.

நண்பர்கள் 3 பேரும் ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்த போது, ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்றார். அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதை பார்த்த சகநண்பர்கள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்றனர். ஆனால், அவர்களால் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற முடியவில்லை. மாறாக அவர்களும் தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இறுதியில் நண்பர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேச்சிப்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன், தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் தேடுதலுக்கு பின்பு, 3 மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

இதையடுத்து இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக கரையில் நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் விஷ்ணுவின் முகவரியும், உறவினர்களின் செல்போன் நம்பரும் இருந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் பதறியடித்து கொண்டு கோதையாறுக்கு விரைந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.