பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்
kim_1

கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் கள பணியாளர்களின் பங்கு முக்கியமானது.இந்தநிலையில் அவர்கள் பணியை மேலும் சிறப்பாக செய்யும் வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் களப்பணியில் ஈடுபடும் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு காய்ச்சல் பார்க்கும் தெர்மல் ஸ்கேனர், ஆக்ஸிஜன் அளவை கண்டறியம் கருவி ஆகியவை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாநில சுகாதார பணிகள் இணை இயக்குனர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்களை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜாண்பிரிட்டோ ஆகியோரிடம் வழங்கினார்.

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவத்துறையை சேர்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் மிக சிறப்பாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள், கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு காய்ச்சல் மற்றும் நாடித்துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிந்து, அதன் வாயிலாக அவர்களுக்கு கொரோனா நோய் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கு ஏதுவாக இந்த கருவிகள் வழங்கப்படுகிறது. அதோடு கிராமங்களில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு மருத்துவ பணியாளர்களுக்கு, அவர்களது பணிகளை எளிதாக்குகின்ற வகையில் இக்கருவி மிகவும் உதவியாக இருக்கும்.

குமரி மாவட்ட மருத்துவ பணியாளர்கள் மிகவும் சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கள் ஆகியோரின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். கொரோனா நோயை முற்றிலுமாக ஒழிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.