Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » கேரள வெள்ளம்: தற்காலிக பாலங்கள் அமைத்து முழு வீச்சில் மீட்பு பணி மேற்கொள்ளும் ராணுவம்
Kerala-Floods-Indian-Army-constructs-13-temporary-bridges

கேரள வெள்ளம்: தற்காலிக பாலங்கள் அமைத்து முழு வீச்சில் மீட்பு பணி மேற்கொள்ளும் ராணுவம்

கொச்சி,

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.

இதில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இது தாழ்வான பகுதிகளை சூழ்ந்து வெள்ளக்காடாக்கி இருக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இதைப்போல இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. கேரளாவில், இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் பேருக்கு மேல் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் அளவும் குறைவாகி வருகிறது. மீட்புப் பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை தொடர்பான சம்பங்களால், 324 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை, முப்படை முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணை பணிகளில் ஈடுபட்டுள்ளது. 10 வெள்ள நிவாரண குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு 65 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் ஊரக பகுதிகளில் உள்ள கிராமங்களில், தற்காலிக பாலங்கள் அமைத்து ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மொத்தம் 13 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை படகு மூலமாகவும் ராணுவம் மீட்டு வருகிறது. இதற்காக 53 ராணுவ படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. கனமழைக்கு இடையேயும் 24 மணி நேரமும் ஓய்வின்றி ராணுவம் முழு வீச்சில் மீட்பு பணிகளை செய்து வருகிறது.