Home » இந்தியா செய்திகள் » கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 150 கி.மீ. தூரம் காரை தானே ஓட்டிச்சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
nat4

கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 150 கி.மீ. தூரம் காரை தானே ஓட்டிச்சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

மும்பை,

மராட்டியம் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில், தலைநகர் மும்பையில் இந்த வைரஸ் பரவல் சற்று தணிந்து உள்ளது. புனே, தானே மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், புனேயில் கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தனது மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து புனேக்கு(சுமார் 150 கி.மீ.) தானே காரை ஓட்டிச் சென்றார். அவருடன் அவரது மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உடன் சென்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டிரைவரை தவிர்த்து அடிக்கடி தானே கார் ஓட்டுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புனே சென்றடைந்த உத்தவ் தாக்கரே மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சசூன் மற்றும் நாயுடு அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புனே மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரத்து 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.