Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரி டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனையா? உயர் அதிகாரிகள் விசாரணை
Is-Kumari-Tasma-selling-copies-of-alcohol-High-officials-are-investigating

குமரி டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனையா? உயர் அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்,

குமரி டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை செய்யப்பட்டதா என டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிசாராய கிடங்கு கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து பிரபல நிறுவனங்கள் பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டி, போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு குமரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குமரியில் ஏற்கனவே பல கடைகளில் மதுபான பாட்டில்கள் மூடியை நவீன இயந்திரங்கள் உதவியுடன் திறந்து விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் பல முறை கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்நிலையில் குமரியில்போலி மதுபானமும் விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் டாஸ்மாக் உயர்அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து சென்னையிலிருந்து டாஸ்மாக் உயர்அதிகாரிகள் இதுபற்றி குமரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடமும், விளக்கமான அறிக்கை கேட்டுள்ளனர். குமரியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? விற்பனை நிலவரம் உள்பட பல்வேறு விபரங்களை ேகட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.45 லட்சம் வரை வசூல் செய்ததுடன், மாமூல் தராத 7 ஊழியர்களை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்தார். இந்த விவகாரமே முடிவடையாத நிலையில், போலி மது விற்பனை விவகாரமும் டாஸ்மாக் வட்டாரத்தை கலங்கடித்து வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதோடு, அதிகாரிகள் கண்டபடி மாமூல் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கலப்பட, போலி மது விற்பனை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு வரும் என டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கூறப்படுகிறது. அதிகாரியை காப்பாற்றுவது யார்? இதற்கிடையே குமரியில் டாஸ்மாக் கடைகளில் பணம் வசூலித்த அதிகாரிக்கு எதிராக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதுபற்றி செய்தி தினகரனில் வெளிவந்த நிலையில், அரசு விசாரணை கமிசன் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களிடம் வசூலித்த பணம் திரும்ப கிடைக்கும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால், லஞ்சம் தர மறுத்த 7 ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், அதிகாரியை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இதற்கு உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் தொடர்பு இருக்கலாம் என ஊழியர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகளுக்கு லட்ச கணக்கில் பணம் தர வேண்டியது உள்ளதாக கூறி பெரும்பாலான கடைகளில், தற்போது ரூ.10 குவாட்டருக்கு வசூலிக்க தொடங்கி விட்டதாக புகார் கூறப்படுகிறது.