Home » குமரி செய்திகள் » குமரியில் சலூன் கடைகள் அடைப்பு
202102270142231418_Closing-of-saloon-shops_SECVPF

குமரியில் சலூன் கடைகள் அடைப்பு

குமரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடந்தது. இதே போல குமரி மாவட்டத்திலும் சலூன் கடை தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி சலூன் கடை தொழிலாளர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
கடைகள் அடைப்பு
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவபெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். சட்ட ஆலோசகர்கள் நாகராஜன், சிவராஜ் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். மாவட்ட பொருளாளர் ராஜா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சுகுமாரன், குமார் இசக்கியப்பன், கண்ணன், ஆறுமுகம், சுனில், சரவணன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையினர் போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சலூன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தக்கலை
இதேபோல் குமரி மாவட்ட அனைத்து சலூன் கடை தொழிலாளர்கள் நலச்சங்கம் கூட்டமைப்பு சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், இசக்கிராஜா, சீனு, கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.