Home » கன்னியாகுமரி செய்திகள் » குடும்ப கட்டுப்பாடு ஆபரே‌ஷன் செய்துகொண்ட இளம்பெண் சாவு: வெளிமாவட்ட டாக்டர் குழுவை கொண்டு பிரேத பரிசோதனை
Death-of-a-young-child-who-had-a-family-control-operation

குடும்ப கட்டுப்பாடு ஆபரே‌ஷன் செய்துகொண்ட இளம்பெண் சாவு: வெளிமாவட்ட டாக்டர் குழுவை கொண்டு பிரேத பரிசோதனை

நாகர்கோவில்,

நட்டாலம் அருகே உள்ள புளியறைவிளையை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மகள் ஆஷா (வயது 29). பட்டதாரியான இவருக்கும், நட்டாலம் எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. விஜய் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஆஷா 2–வதாக கர்ப்பம் அடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆஷாவை பிரசவத்துக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு ஆபரே‌ஷன் அங்குள்ள டாக்டர்களால் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவர் திடீரென இறந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் ஆஷா இறந்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டி, திடீர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று தங்கப்பன் மற்றும் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரெகுபதி உள்ளிட்டோர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்கப்பன் கூறியிருப்பதாவது:–

எனது மகளை 2–வது பிரசவத்துக்காக கடந்த 2–ந் தேதியன்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். மறுநாள் எனது மகளுக்கு சுகப்பிரசவம் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். இதையடுத்து 6–ந் தேதி குடும்ப கட்டுப்பாடு ஆபரே‌ஷன் நடந்தது. அதன்பிறகு எனது மகளை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். 10–ந் தேதி வரை மருத்துவமனை நிர்வாகம் ஆஷாவை பார்க்க அனுமதிக்கவில்லை.

அங்குள்ள டாக்டர்களால் 2–வது முறையும் ஆபரே‌ஷன் செய்ததாக தெரிகிறது. நாங்கள் அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் கேட்டபோது, ஆஷா உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தார். உடனே நாங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். ஆனால் டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்தநிலையில் கடந்த 10–ந் தேதி காலை சுமார் 7 மணி அளவில் எனது மகளை ‘ஸ்ட்ரெச்சரில்‘ எடுத்துச் சென்றனர். இதைப்பார்த்த நான், எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் உங்கள் மகள் இறந்துவிட்டார், அதனால் பிணவறைக்கு எடுத்துச் செல்கிறோம் என்றார்கள். எனவே எனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. டாக்டர்களின் தவறான சிகிச்சை, கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக அவள் இறந்திருக்கிறாள்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தால் எனது மகளின் மரணத்துக்கான நியாயம் மறுக்கப்படும். டாக்டர்களின் சிகிச்சையில் உள்ள தவறுகளை மறைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே உடற்கூறு ஆய்வின் உண்மைத் தன்மைகள் முழுவதும் வெளியே கொண்டு வர, வெளி மாவட்ட டாக்டர்கள் குழுவை கொண்டு பிரேத பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின்போது ஆஷாவின் உறவினர் ஒருவர் உடன் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவும், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட ஆஷாவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயிபிரெயிலி கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அப்போது அருவிக்கரை இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய் குடிமராமத்து மற்றும் பாசன பராமரிப்பு சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன் தலைமையில் மனு கொடுத்தனர்.

அதில், “திருவட்டார் அருவிக்கரை அணை நீர் பாசனத்துக்கு உரிய அணையாகும். இந்த அணையில் இதுவரை பராமரிப்பு பணி எதுவும் செய்யாததால் நீர் கசிந்து வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே அணையின் பக்க சுவரில் அரை அடி காங்கிரீட் அமைத்து, கசிவுகளை அடைத்து பாசனத்துக்கும், குடிநீருக்கும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதேபோல் நவஜீவிதாஸ் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் தாணுமாலயப் பெருமாள், பழனிசாமி ஆகியோர் கொடுத்த மனுவில், “நாகர்கோவில் அனாதைமடம் மைதானத்தில் நாகர்கோவில் நகராட்சி குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைத்திட அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருவதாக தெரிகிறது. இந்த உரத்தொழிற்சாலை அமைந்தால் சுகாதார சீர்கேடுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்த உரத்தொழிற்சாலையை அங்கு நிறுவக்கூடாது. எனவே இதனை மாற்றியமைத்து எங்கள் பகுதியில் சுகாதாரத்தை பேணிகாத்திட உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்“ எனக்கூறப்பட்டுள்ளது. மேலும் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.