Home » சற்று முன் » குடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Tamil-Nadu-government-condemnsOn-the-22nd-the-DMK-will-be

குடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை,

குடிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 22-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குடிநீர் பிரச்சினை

‘குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன?, நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’, என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அ.தி.மு.க. அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அடாவடியான பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை.

தண்ணீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொதுமக்களையும் கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் பேட்டியளித்து வருகிறார்கள்.

சாபக்கேடு

உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது, ஐ.டி. கம்பெனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டிருப்பது, பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி, சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் தினம் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆனால் கடமை தவறிய அ.தி.மு.க. அரசு கண்ணை மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

22-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஆகவே, அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தையும், முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உடனடியாக ஆக்கப்பூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியும் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறவழியில் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.