Home » குமரி செய்திகள் » கீழ்பம்மம் பகுதி ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி
05

கீழ்பம்மம் பகுதி ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி

மார்த்தாண்டம் குலசேகரம் ரோட்டில் கீழ்பம்மம் பகுதியில் ராட்சத பள்ளங்கள் தோன்றி மழைநீர் குளம் போல காட்சியளிப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரோடுகள் முறையாக செப்பனிடப்படாததால் எளிதில் சேதம் அடைந்து குழிகள் தோன்றுகிறது. அந்த குழிகளை உடனடியாக தார், ஜல்லி போட்டு முறையாக பராமரிக்காமல் விடப்படுவதால் நாளடைவில் அவை மெகாசைஸ் பள்ளங்களாக மாறி விடுகிறது. இந்த பள்ளங்களில் சிக்கும் வாகன ஒட்டிகள் விபத்துக்களில் மாட்டி கை, கால்களை இழக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மழை நேரங்களில் இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வழியாக டூவீலர்களில் செல்பவர்களும், ரோட்டோரம் நடந்து செல்பவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வாகனங்கள் எளிதில் சேதம் அடைந்து தேவையற்ற எரிபொருள் விரயம், மற்றும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். மார்த்தாண்டம் – குலசேகரம் ரோட்டில் கீழ்பம்மம் பகுதியில் கடந்த சிலமாதங்களாக ரோடு மிகவும் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. ரோடு கிடந்த இடம் கூட தெரியாத அளவிற்கு பள்ளங்கள் தோன்றியுள்ளது. தற்போது அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இப்பகுதியில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக மாறிவிட்டது. இது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதற்காக குரல் கொடுக்க தொகுதி எம்.எல்.எ. போன்ற மக்கள் பிரதிநிதிகளும் காணாமல் போய்விட்டனர் என ஆதங்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன்கருதி பழுதடைந்து குண்டும், குழிகளுமாக காணப்படும் ரோடுகளை முறையான தார், ஜல்லி போட்டு செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.