Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை
Attack-Against-Kashmir-Terrorists-plan-intelligence-warning

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.

இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் சிலர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த உரையாடல்களை உளவுத்துறை இடைமறித்து கேட்டுள்ளது.

இதில், புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்து விட்டதால் அடுத்தக்கட்டமாக மீண்டும் ஒரு, பெரிய அளவிலான வெடிகுண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையில் முந்தைய தாக்குதலை விட அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு வெளியே நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறை பிப்ரவரி அறிக்கையின்படி, காஷ்மீர் உட்பட 3 இடங்களில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக 3 தற்கொலைப்படையினர் உள்ளிட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 21 பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காஷ்மீருக்கும் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் இந்தியா நிலை குலைந்து போகும் என்பதால் உளவியல் ரீதியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் வகுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு படையினர் முழு விழிப்புணர்வுடன் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.