Templates by BIGtheme NET
Amarnath-pilgrims-killed-in-bus-mishap-in-Kashmir

காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து அமர்நாத் பக்தர்கள் 16 பேர் பலி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் அமர்நாத் பக்தர்கள் 16 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 10–ந்தேதி இரவு அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்துக்கு அருகே பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பஸ்சில் சென்றுகொண்டிருந்த குஜராத் மாநில பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 8 பேர் உயிர் இழந்தனர்.

இந்த சோகச்சுவடு மறைவதற்குள் நேற்று காஷ்மீரில் நடந்த பஸ் விபத்தில் அமர்நாத் பக்தர்கள் 16 உயிர் இழந்த சம்பவம் பக்தர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரம்பான் மாவட்டத்துக்கு அருகே அரசு பஸ் ஒன்று அமர்நாத் பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

நச்லானா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓரத்தில் உள்ள ஆழமான பள்ளத்தில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 27 பேர் பலத்த காயம் அடைந்தனர். உயிர் இழந்த அனைவரும் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா, அசாம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ரம்பான் மாவட்ட அரசு அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர்களில் 19 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பஸ் விபத்தில் அமர்நாத் பக்தர்கள் உயிர் இழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எனது எண்ணங்கள் அனைத்தும் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களோடு உள்ளது. படுகாயம் அடைந்த அனைவரும் விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டு உள்ளார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இதே போல் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஸ் விபத்தில் உயிர் இழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

முன்னதாக அவர் காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி மற்றும் கவர்னர் என்.என். வோரா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். கவர்னர் என்.என். வோரா விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று மீட்புபணிகளை பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*