Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » கன்னியாகுமரி துறைமுக திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம்
Kanyakumari-Port-Fast-against-the-project

கன்னியாகுமரி துறைமுக திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம்

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே இனயம் கடல் பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கன்னியாகுமரி துறைமுக திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அப்பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. துறைமுக எதிர்ப்பு இயக்கம் சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கோவளத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, சிலுவைநகர், புதுக்கிராமம், கோவளம், கீழமணக்குடி, மேலமணக்குடி, இலந்தையடிவிளை, முகிலன்குடியிருப்பு, நரியன்விளை, தென்தாமரைகுளம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நேற்று காலையில் திரளான மக்கள் வந்தனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்காக கோவளம் கடற்கரை விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பந்தலில் அனைவரும் அமர்ந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். காலை 9 மணி அளவில் போராட்டம் தொடங்கியது.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பிரபா பெர்னான்டோ, குமரி சமூக விடியல் இயக்க தலைவர் வக்கீல் ஸ்ரீதர், தமிழ்நாடு மீன் தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் வக்கீல் செலஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, குளச்சல் நகரசபை முன்னாள் தலைவர் ஜேசையா உள்ளிட்டோர் பங்கேற்று, துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள்.

இதே போல் கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆலய பங்குதந்தையர்கள், மாணவ-மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி நேற்று கோவளம் கடற்கரை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால், அவர்களது கட்டுமரங்களும், வள்ளங்களும் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.