பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » கன்னியாகுமரியில் கடல் சீற்றம் நீடிப்பு: படித்துறை கட்டும் பணி பாதிப்பு
kim_3

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் நீடிப்பு: படித்துறை கட்டும் பணி பாதிப்பு

இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவர்கள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் ஆகியவற்றை கண்டுகளித்து கடலில் நீராடி மகிழ்வார்கள். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதில்லை. இதனால், கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் லேசான கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த சீற்றம் 2-வது நாளாக நீடித்தது. அத்துடன் அலைகள் ஆக்ரோஷமாக இருந்தது. பல அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்து பாறைகளில் மோதி சிதறின. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து கொண்டிருந்தது.

கன்னியாகுமரி கடற்கரையில் கைப்பிடியுடன் படித்துறை கட்டும் பணி நடந்து வருகிறது. பணிகள் நடைபெறும் இடத்தில் கடல் நீர் புகாதவாறு ஆயிரக்கணக்கான மணல் மூடைகள் அடுக்கி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் தடுப்பை கடந்து படித்துறை பணி நடைபெறும் பகுதியில் புகுந்தது. அத்துடன் சில மணல் மூடைகளையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால், படித்துறை கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கோவளம் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்து தூண்டில் வளைவு மீது மோதின. தூண்டில் வளைவு ஏற்கனவே சேதமடைந்து இருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் மேலும் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது கட்டுமரம் மற்றும் வள்ளங்களை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் கடல் சீற்றம் காரணமாக அவற்றை அலைகள் அடித்து செல்ல தொடங்கியதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தினர்.

இதுபோல், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, வாவத்துறை போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டது.