Home » கன்னியாகுமரி செய்திகள் » கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
sea-waves

கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி அருகே அஞ்சுகூட்டுவிளையைச் சேர்ந்தவர் சகாயவில்சன் ( 43). இவர் குளச்சலில் தங்கி ஜெயசீலன் என்பவரது விசைப் படகில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.

மே 13-ஆம் தேதி வழக்கம் போல் இவர் குளச்சல் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து விசைப் படகில் மீன் பிடிக்க சென்றார். இவருடன் 13 தொழிலாளர்களும் சென்றனர். 14-ஆம் தேதி நள்ளிரவில் படகில் இருந்த சகாயவில்சனை காணவில்லை. அவர் தவறி கடலில் விழுந்தருக்கலாம் என உடன் சென்றவர்கள் கூறினராம்.
இது குறித்து, படகு உரிமையாளர் ஜெயசீலன் குளச்சல் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த நான்கு நாள்களாக சகாயவில்சனை மீனவர்கள் விசைப் படகில் சென்று பல இடங்களிலும் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லையாம். இதனால் அக்குடும்பத்தினர் செய்வது அறியாது உள்ளனர்.

இந்நிலையில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் வெள்ளிக்கிழமை சகாயவில்சனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி சாலினி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், விசைபடகு சங்க நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கூறியது: மீனவர் சகாயவில்சன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவரை நம்பியுள்ள அவரது குடும்பம் மிகவும் துன்பத்துக்குள்ளாகி செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர்.
ஒரு மீனவர் மாயமானால் ஏழு ஆண்டுகள் கழித்துதான் மாயமானார் என்று வழக்கு பதிவு செய்வர். இதனால் மாயான மீனவர் குடும்பத்திற்கு அரசின் சலுகைகள் கிடைக்க காலதாமதமாகிறது. எனவே மாயமான மீனவர் குடும்பம் பயன்பெற இந்த விதியை தளர்த்தவேண்டும். சகாயவில்சனை கண்டுபிடிக்கும் வரை அவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.