Templates by BIGtheme NET
Struggle

கடற்கரை கிராமங்களை இணைத்து மாநகராட்சியாக மாறுகிறது நாகர்கோவில் மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு

நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரை கிராமங்களையும் கூடுதலாக இணைத்து, நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக மாறுகிறது. இதற்கிடையே மக்களிடம் கருத்து கேட்காமல் கடற்கரை கிராமங்களை இணைக்க கூடாது என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாகர்கோவில் நாகராஜா திடலில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் பேசிய ெஜயலலிதா, நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும் என உறுதி அளித்தார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால் அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் நகராட்சியில் அதிமுக தோல்வி அடைந்து, பாரதிய ஜனதாவை சேர்ந்த மீனாதேவ் நகராட்சி தலைவர் ஆனார். இதனால் மாநகராட்சியாக மாற்றும் முடிவை, அதிமுக அரசு தள்ளி வைத்தது.

இந்த நிலையில் தற்போது இதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. மக்கள் தொகை மற்றும் பரப்பளவிற்காக தேரேகால்புதூர், நல்லூர், திருப்பதிசாரம், பீமநகரி, இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், கணியாகுளம், புத்தேரி, பறக்கை, மேலகிருஷ்ணன்புதூர், மணக்குடி, பள்ளம்துறை, கேசவன்புத்தன்துறை, தர்மபுரம், ஆத்திக்காட்டுவிளை, ராஜாக்கமங்கலம், எள்ளுவிளை, மேலச்சங்கரன்குழி ஆகிய ஊராட்சிகள் நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வரி நிர்ணயமும் நடைபெறாமல் உள்ளது. நாகர்கோவில் நகரை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது இதற்கான பூர்வாங்க பணிகளும் நடந்து வருகின்றன. நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக மாற்றுவது தொடர்பாக ஏற்கனவே நகர் மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் பல ஊராட்சிகள் இணைய உள்ளதால், இது தொடர்பான பூர்வாங்க பணிகளில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

இதற்கிடையே ராஜாக்கமங்கலம்துறை கமிட்டி தலைவர் ஆல்பின் தலைமையில் நாகர்கோவிலில் நேற்று முன் தினம் மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மணக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர், பள்ளம் துறை ஊராட்சி முன்னாள் தலைவர் மரியபுரோஸ், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் செலஸ்டின், கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொது செயலாளர் அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மீனவ கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிகளை நாகர்கோவிலுடன் இணைத்தால், வறுமைக்கோடு பட்டியல், ஊரக வேலைவாய்ப்பு, பசுமை வீடு மானியம் போன்றவற்றை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் வீட்டு வரி, கட்டிட வரி உயரும். நில மதிப்பீடு உயர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மீனவர்களுக்கான மக்கள் பிரதிநிதித்துவம் இழக்க நேரிடும். குடிதண்ணீர், மின்சாரம், சாலை போன்ற வசதிகள் தற்போது பெறமுடியாத நிலையில், இது மேலும் வசதி குறைவை ஏற்படுத்தும். கட்டிட உரிமம் பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படும். எனவே மக்களின் கருத்து கேட்பு நடத்தாமல், நாகர்கோவிலுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏக்களை சந்தித்து இதுகுறித்து மனு அளிப்பதுடன், கடற்கரை கிராமங்களை சேர்ந்த 5 ஊராட்சி மக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன் வருகிற 24ம் தேதி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 8ம் தேதி முதல்வர் அறிவிக்கிறார்?
நாகர்கோவில் நாகராஜா திடலில் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் (நவம்பர்) 8ம் தேதி நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில் குமரி மாவட்டத்துக்கு பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். இதில் நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெறும் என தெரிகிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. 2018ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது மாநகராட்சி என்ற நிலையிலேயே நாகர்கோவில் மக்கள் வாக்களிக்க வேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.