Templates by BIGtheme NET
Venture-robbery-in-Chennai-railway-for-retired-professor

ஓய்வுபெற்ற பேராசிரியையிடம் சென்னை ரெயிலில் துணிகர திருட்டு

நாகர்கோவில்,

நாகர்கோவில் ராமன்புதூர் ஹோலிகிராஸ் நகரை சேர்ந்தவர் பாஸ்கல்ராஜ் (வயது 61), பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பெனடிட்டாள் (60). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களுடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவன்–மனைவி இருவரும் மகனை பார்ப்பதற்காக சென்னை சென்றனர்.

அங்கு இருந்து ஊருக்கு திரும்புவதற்காக நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன வசதிகொண்ட பெட்டியில் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் இரவில் அயர்ந்து தூங்கினார்கள். ரெயில் மதுரை அருகே வந்தபோது பெனடிட்டாள் திடீரென கண் விழித்து பார்த்தார். அப்போது அவர் அருகில் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. கைப்பையில் அவர் 12 பவுன் நகையும், விலை உயர்ந்த 2 செல்போன்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நகை மற்றும் செல்போன்கள் திருட்டுப்போன அதிர்ச்சியில் பெனடிட்டாள் கூச்சலிட்டார்.

இதுபற்றி ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கைப்பை திருட்டுப்போன பெட்டியில் தங்கியிருந்த அனைவரிடமும் போலீஸ்காரர் சோதனை நடத்தினார். ஆனால் பெனடிட்டாளின் நகை மற்றும் செல்போன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கழிவறையில் பார்த்தபோது அங்கு கைப்பை கிடந்தது. ஆனால் அதில் நகை மற்றும் செல்போன்கள் இல்லை.

யாரோ மர்ம நபர்கள் ரெயிலில் பெனடிட்டாளின் கைப்பையை திருடிச்சென்று, அதில் இருந்த நகை மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு, கைப்பையை கழிவறையில் வீசி சென்றது தெரியவந்தது. குளிர்சாதன வசதிகொண்ட பெட்டி என்பதால் அங்கு வேறு பயணிகள் வந்து செல்ல வாய்ப்பு இல்லை. எனவே டீ விற்பனை செய்வதுபோல மர்ம நபர்கள் வந்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் வந்திறங்கியதும், உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் பெனடிட்டாள் புகார் மனு அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருட்டு சம்பவம் நடந்தது மதுரை என்பதால் பெனடிட்டாள் அளித்த புகாரை மதுரை ரெயில்வே போலீசுக்கு அனுப்ப நாகர்கோவில் ரெயில்வே போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*