Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » ஓகி புயல் தாக்கி 40 நாட்களாகியும் சீரமைக்கப்படாத பல்லுயிரின பூங்கா உள்ளே அனுமதிக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Puliyoor Kurichi--Udayagiri-Fort-in-Kanyakumari

ஓகி புயல் தாக்கி 40 நாட்களாகியும் சீரமைக்கப்படாத பல்லுயிரின பூங்கா உள்ளே அனுமதிக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தக்கலை, ஜன.12 : ஓகி புயலின் தாக்குதலில் சேதமடைந்த புலியூர்குறிச்சி பல்லுயிரின பூங்கா 40 நாட்கள் கடந்தும் இதுவரை சீரமைக்கப்படாமல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட முடியாத நிலை உள்ளது.கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உதயகிரி கோட்டை அமைந்திருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டை உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்தது. இந்த வளாகத்தில் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதியாக விளங்கிய டச்சு படை வீரர் டிலெனாய் மற்றும் அவரது குடும்பத்தினரது கல்லறைகள் உள்ளன. இவை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளன. பாழடையும் நிலையில் இருந்த இந்த கோட்டை 2002ல் பொலிவடைய தொடங்கியது. வனத்துறை சார்பில் இங்கு மான் பூங்கா தொடங்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ச்சியாக மயில்கள், கூஸ் வாத்துக்கள் கொண்டுவரப்பட்டன. மூலிகைப் பூங்கா, மீன் கண் காட்சியகம், ஏறு மாடம் என்ற மர உச்சிக்குடில், ஓய்வு குடில்கள், சிறுவர்களுக்கான ஊஞ்சல்கள், சறுக்கி விளையாடும் கருவிகள் அமைக்கப்பட்டன. சூழியல் சுற்றுலா தலமான இங்கு குறைவான செலவில் சுற்றுலா பயணிகள் பொழுதை போக்கினர். இந்த கோட்டையில் மேலும் பல அபிவிருத்தி பணிகள் வனத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. ஆனால் நிதி ஒதுக்கீடு என்பது கடந்த சில ஆண்டுகளில் அறவே இல்லாமல் போனது. இதனால் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தமுடியவில்லை. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வந்த வேகத்திலே திரும்புகின்றனர்.
பின்னர் புதுமண தம்பதிகளுக்கு வீடியோ எடுக்கும் தலமாகவும், காதல் ஜோடிகளுக்கு புகலிடமாகவும் இது மாறத் தொடங்கியது.

இந்நிலையில் நவம்பர் 30ல் வீசிய ஓகி புயலால் பல்லுயிரின பூங்கா முற்றிலும் சேதமடைந்ததுடன் அதன் பொலிவை இழந்தது. அங்கிருந்த பல ஆண்டுகளை கடந்த ராட்சத மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. இதனால் பலம் மிக்க கோட்டைச்சுவர் பல இடங்களில் சேதமானது.
மரங்கள் விழுந்ததால் மக்கள் செல்லும் பாதைகள் அடைபட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் கோட்டை பூட்டப்பட்டது. தற்போது 40 நாட்களை தாண்டிய பிறகும் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பார்வையிட முடியாமல் திரும்ப செல்கின்றனர்.

மாவட்டத்தில் பல இடங்களில் தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் சாய்ந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மரம் வெட்டும் கும்பல்கள் லேசாக சாய்ந்த தேக்கு உள்ளிட்ட காட்டு மரங்களை முறித்துச் சென்றனர். வனத்துறையினரால் இவற்றை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தனது வசம் இருக்கும் உதயகிரி பல்லுயிரின பூங்காவை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வனத்துறை ஏன் தயக்கம் காட்டுகிறது எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இங்கிருக்கும் 32க்கும் மேற்பட்ட மான்கள் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியவில்லை. தற்போது மான்கள் மேய்வதற்கான பரப்பளவு குறைவாக உள்ளது. அவற்றை சுதந்திரமாக விட்டால் வெளியேறும் நிலையே காணப்படுகிறது.இதனால் வாட்டும் வெயிலிலும், நடுக்கும் குளிரிலும் சிக்கி மான்களை களையிழந்து காணப்படுகின்றன. இங்கு சிறுவர்கள் பயன்படுத்தும் சறுக்கு விளையாட்டு கருவிகள் அனைத்துமே சேதமடைந்துள்ளன. தற்போது பெயரளவிலான பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. உதயகிரி கோட்டையை முன் மாதிரி நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால் சுமார் ஒரு கோடி அளவிலான திட்டங்களை தயாரித்தால் மட்டுமே சாத்தியமாகும். அப்போது தான் சுற்றுலா பயணிகளும் நிறைந்த மனதுடன் செல்ல இயலும். இதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வனத்துறையினரை வற்புறுத்த வேண்டும். சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முன் வரவேண்டும்.

15 நாட்களில் சீரமைக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனைஓகி புயலின் தாக்குதலில் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் சேதாரமடைந்திருந்தது. சம்பந்தப்பட்ட கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடநபள்ளி ராமச்சந்திரன் பார்வையிட்டு, அதை சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கினார். அரண்மனை சீரமைக்கப்பட்டு 15 தினங்களுக்குள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உதயகிரி கோட்டையில் நிலைமை தலை கீழாக உள்ளது.