Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » ஒக்கி புயல் பாதிப்பு: ரூ.300 மதிப்பிலான வாழைத்தார்களை ரூ.10-க்கு விற்ற விவசாயிகள்
Storm-Damage-farmers-sold-to-Ru-10-worth-Rs-300-banana

ஒக்கி புயல் பாதிப்பு: ரூ.300 மதிப்பிலான வாழைத்தார்களை ரூ.10-க்கு விற்ற விவசாயிகள்

நாகர்கோவில்:

வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும் என்று கிராமபுறங்களில் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த அளவுக்கு விவசாயிகளுக்கு பண பயிராக வாழை விளங்கி வருகிறது. எந்த சேதமும் இல்லாமல் விளைந்தால் விவசாயி வாழ்வு உயரும். அதே சமயம் விளைச்சல் பாதித்தால் அந்த விவசாயியின் நிலை மிகவும் வேதனைக்கு சென்று விடும்.

ஒக்கி புயல் ஓங்கி அடித்ததில் குமரி மாவட்ட வாழை விவசாயிகள் சந்தித்துள்ள நஷ்டம் அவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் தோவாளை, கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் லட்சக்கணக்கில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு இருந்தது. அதிக லாபம் தரும் செவ்வாழை, ஏத்தன் வாழைகளையே விவசாயிகள் அதிகம் பயிர் செய்து இருந்தனர்.

ஒக்கி புயல் கோர தாண்டவம் ஆடியதில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாழைகள் முறிந்து விழுந்து விட்டன. ஒரு ஏக்கருக்கு ஆயிரம் முதல் 1500 வரை வழைகள் பயிரிடப்பட்டு இருந்தவர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். மொத்தத்தில் பல லட்சம் ரூபாய் பாதிப்புகளை விவசாயிகளுக்கு ஒக்கி புயல் ஏற்படுத்தி விட்டன.

பெரும்பாலான வாழை விவசாயிகள் நிலங்களை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டிருந்தனர். இதனால் அவர்கள் வாழையை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் உள்ளனர். அவர்கள் நில உரிமையாளருக்கு குத்தகைக்கே சில லட்சங்களை கொடுத்து உள்ளனர். அதன் பிறகு வாழை பயிர் செய்ய ஏராளமான பணத்தை செலவிட்டு உள்ளனர்.

தற்போது முதலுக்கே மோசம் என்பது போல வாழை விவசாயத்தை முழுமையாக பல விவசாயிகள் இழந்து தவிக்கிறார்கள்.

இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் புயலால் சாய்ந்த வாழை குலைகளை மினி வேன்களில் ஏற்றிச் சென்று சாலையோரங்களில் போட்டு மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆசாரிபள்ளம் பகுதியில் ஒக்கி புயலால் சாய்ந்த வாழைகள்

புத்தேரி, கேசவன்புதூர், சீதப்பால், கடுக்கரை, பூதப்பாண்டி பகுதியில் சரிந்த வாழைகள் ஆரல்வாய்மொழி பகுதியில் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வாழை குலைகளை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு குலை வாழை ரூ.300க்கு விற்றது, தற்போது ரூ.10 முதல் ரூ.50 வரை தான் விலை போகிறது. தங்கள் வேதனையை மறைத்துக் கொண்டு வாழை குலைகளை விற்பனை செய்யும் அந்த விவசாயிகளிடம் சிலர் பேரம் பேசும் செயலும் பல இடங்களில் நடக்கிறது.

இது பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

ஒரு ஏக்கரில் வாழை பயிர் செய்ய நில உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் குத்தகைக்கு பேசி விவசாயத்தை தொடங்கினேன். அதன் பிறகு வாழை கன்று வாங்கியதில் இருந்து பூச்சி மருந்து செலவு, விவசாய தொழிலாளர்கள் செலவு என்று சில லட்சங்கள் செலவாகி விட்டது. ஒகி புயல் பாதிப்பால் எனக்கு எதுவுமே மிஞ்சவில்லை. இனி அரசு வாழை விவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுத்தாலும் அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை. காரணம் நில உரிமையாளர்கள் தங்கள் ஆவணங்களை காட்டிதான் அந்த நஷ்டஈட்டை பெற முடியும். அந்த வகையில் குத்தகைக்கு எடுத்த எங்களுக்கு எதுவுமே கிடைக்காது. அந்த பலனையும் நில உரிமையாளர்களே அடைவார்கள் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.