Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » ஐக்கிய அரபு நாட்டில் சிறைபிடிப்பு குமரி மீனவர்களுடன் போனில் பேச முடியாமல் குடும்பத்தினர் தவிப்பு
fishermen-captured

ஐக்கிய அரபு நாட்டில் சிறைபிடிப்பு குமரி மீனவர்களுடன் போனில் பேச முடியாமல் குடும்பத்தினர் தவிப்பு

நாகர்கோவில், பிப்.12: குமரி மாவட்டம் குறும்பனை, குளச்சல் பகுதிகளை சார்ந்த மெல்லஸ் மகன் ஜெரோம், சின்னப்பன் மகன் ஜாண்சன், அல்போன்ஸ் மகன் மரிய ஜாண், குணசீலன் மகன் செகிஸ்கான், ஜாண்போஸ்கொ மகன் ஆனந்து, சகாயராஜ் மகன் சகாய பினு ஸ்டீபன், ரெம்சியான் மகன் அருண்சிங் ஆகிய 7 மீனவர்கள் ஜாசிம் அகமது என்பவருக்கு சொந்தமான அல்பிலாத் என்ற படகில் கடந்த 18ம் தேதி கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடிக்கும் தொழிலுக்கு சென்றபோது கடல் எல்லை தாண்டியதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இம்மீனவர்களின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி கத்தார் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இம்மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டுகோள் வைத்தார். மேலும் துபாயிலுள்ள இந்திய தூதரக அதிகாரி சுமதி வாசுதேவையும் தொடர்பு கொண்டு இம்மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இம்மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தநிலையில் கத்தார் நாட்டிலுள்ள இந்திய தூதர், ‘இம்மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது’ என தெரிவித்துள்ளார். இம்மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இவர்களைப்பற்றி எந்த விபரமும் தெரியாததால் இவர்களது உறவினர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். மேலும் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை போனில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிய முடியாத நிலை நீடிப்பதால் கவலையடைந்துள்ளனர்.