பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » எம்.பி., எம்எல்ஏக்கள் மீது போக்சோ, ஊழல் தடுப்பு உள்பட சிறப்புச் சட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை
579461

எம்.பி., எம்எல்ஏக்கள் மீது போக்சோ, ஊழல் தடுப்பு உள்பட சிறப்புச் சட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

பல்வேறு மாநிலங்களில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது போக்சோ, ஊழல் தடுப்புச் சட்டம், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் உள்பட சிறப்புச் சட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்போது பதவியிலிக்கும் எம்.பி.க்கள், எம்ஏல்ஏக்கள் மீது மட்டும் வருமானவரிச் சட்டம், கம்பெனிச் சட்டம், சட்டவிரோத ஆயுதத் தடுப்புச் சட்டம், கலால் வரிச் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன.

நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாஜகவைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அஸ்வானி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது இருக்கும் வழக்குகள், விசாரணையில் இருக்கும் வழக்குகள் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மாநில வாரியாக வழக்குகள் விவரங்களையும் அளிக்க வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் சார்பில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துச் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி நடந்த விசாரணையின்போது, மாநில உயர் நீதிமன்றங்கள் 12 ஆம் தேதிக்குள், எம்.பி., எம்எல்ஏக்கள் மீது சிறப்புச் சட்டத்தின் கீழ் அதாவது போக்சோ சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்ஸ்சாரியா அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

”கடந்த மார்ச் 5, செப்டம்பர் 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவையடுத்து,மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கிய விவரங்கள்படி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 175 வழக்குகள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது உள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கின் விவரங்களை ஆய்வு செய்தபோது, நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணை நீதிமன்றங்கள் ஒரே மாதிரியாக அமைக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மட்டும் விசாரிக்க ஒரே ஒரு சிறப்பு நீதிமன்றம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் சிறப்பு நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் அந்தந்த நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதில் நீதிமன்றங்களில் தெளிவு இல்லை. உதாரணமாக மத்தியப் பிரதேசத்தில் 21 வழக்குகளும், கர்நாடகத்தில் 20 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றமும், பதவியில் இருக்கும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க, ஒரு நீதிமன்ற அதிகாரியை மாவட்டந்தோறும் நியமிக்கலாம். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தைச் சிறப்பு நீதிமன்றமாக அமைக்கலாம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணையை முடிக்காமல் இருக்கும் வழக்குகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றங்கள் கீழ் நீதிமன்றங்களில் கேட்டுப் பெற வேண்டும்.

மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, தனிப்பட்ட முறையில் இதில் கவனம் செலுத்தி, செயல் திட்டத்தை உருவாக்கி, இந்த வழக்குகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க உத்தரவிட வேண்டும்.

இதற்காக தனி நீதிமன்ற அதிகாரியை உயர் நீதிமன்றம் அமைத்து, வழக்குகளின் தன்மை, கிரிமினல் வழக்குகள், தீவிரமான வழக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து விசாரிக்கலாம்.

இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்படும் நீதிபதி குறைந்தபட்சம் தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் தொடர வேண்டும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.