Home » வர்த்தகம் செய்திகள் » உலகின் 2வது பெரிய எரிசக்தி நிறுவனமாக உருவெடுத்தது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்!
varthagam

உலகின் 2வது பெரிய எரிசக்தி நிறுவனமாக உருவெடுத்தது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்!

ரிலையன்ஸ் நிறுவனமானது மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை அதன் பங்குச்சந்தை மதிப்பை 4.3 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அதன் சந்தை மதிப்பு 8 பில்லியன் டாலர் கூடியது. இதன் மூலம் ரிலையன்ஸின் மொத்த மதிப்பு 189 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது இந்நிறுவனம் எக்ஸான் மொபில் என்ற நிறுவனத்தை முந்தி, சவுதி ஆரம்கோ நிறுவனத்திற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமாக மாறியுள்ளது.

மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனமானது, தொடர்ந்து தனது பங்குச்சந்தை மதிப்பைக் கூட்டி வருகிறது. இந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 43 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால் எக்ஸான் மொபில் நிறுவனத்தின் பங்குகள், இதே காலக்கட்டத்தில் 39 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் அந்நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. ஆரம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1.76 டிரில்லியன் டாலராக உள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமாக திகழ்கிறது.

மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில், எரிசக்தி வணிகத்தின் மூலமாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 80 சதவீதம் வருவாய் கிட்டியது. எனினும் டிஜிட்டல் மற்றும் சில்லறை வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக 20 பில்லியன் டாலரை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இது அவருடைய செல்வத்தில் மேலும் 22.3 பில்லியன் டாலரைச் சேர்க்க உதவியது. இதன் மூலம் அவர் ப்ளும்பெர்க் பில்லியனர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றார். தற்போது அம்பானியின் ஜியோ டிஜிட்டல் தளத்தில் முதலீடு செய்ய கூகுள் மற்றும் ஃபேஸ்புக் முன்வந்துள்ளது.

63 வயதான முகேஷ் அம்பானி, தனது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக தொழில்நுட்பம் மற்றும் சில்லறை வணிகத்தைத் தேர்வு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய்யின் தேவை வரலாறு காணாத அளவு குறைந்தது. இதனால், ஒரு நாளைக்கு சுமார் 30 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் விற்காமல் தேங்கின. பல ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி மற்றும் ஓபெக் நாடுகள் உற்பத்திக் குறைப்புப் போன்றவையும் கச்சா எண்ணெய் சந்தையை வெகுவாக பாதித்தன. தற்போதுதான் அதிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் மீண்டு வருகின்றன.