கல்புர்கி- திருப்பதி இடையேயான முதல் நேரடி விமான சேவை உடான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
தற்போது நடுத்தர பிரிவு மக்களும் விமானத்தில் பறக்கின்றனர். இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது உடான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு பல வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. உதாரணத்துக்கு பயணிகளுக்கு, ஒரு மணிநேர பயணத்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,500 மட்டுமே.
விமான நிறுவனங்களுக்கு விமான எரிபொருளில் வரிச்சலுகை, விமான நிலையங்களில் தரையிறங்கும் மற்றும் நிறுத்தும் கட்டணம் கிடையாது. குறிப்பிட்ட வழித்தடத்தை ஏலத்தில் எடுத்துக்கொண்டால் மூன்று ஆண்டுகளுக்கு அந்த வழித்தடம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது. அதாவது வேறு எந்த நிறுவனங்களுடனும் போட்டியிடத்தேவையில்லை. தவிர விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்வதற்காக நிதியம் (விஜிஎப்) ஒன்று அமைக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் இந்த மானியத்தை இணைந்து வழங்கும். மற்ற விமான நிறுவனங்களும் இந்த நிதியத்துக்கு நிதி வழங்கவேண்டும். மேலும் மற்ற வழித்தடத்தில் செல்பவர்களுக்கு விஜிஎப் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. இதில் 70 விமான நிலையங்கள் இந்த உடான் திட்டத்தின் மூலம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும்.
இந்தியாவில் பிராந்திய வான்வழி இணைப்பு சேவைகளுக்கு வலுவூட்டும் மற்றுமொரு நடவடிக்கையாக, கர்நாடகாவில் உள்ள கல்புர்கியில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி வரையிலான நேரடி விமான சேவைகளை இந்திய அரசின் பிராந்திய இணைப்புக்கான உடான் திட்டத்தின் கீழ் ஸ்டார் ஏர் தொடங்கியது.
உடான் திட்டத்தின் இரட்டை நோக்கங்களான விமான பயணத்தை குறைந்த செலவில் மக்களுக்கு அளிப்பது மற்றும் நாட்டில் அதன் சேவைகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றை அடையும் விதமாக, 305 உடான் வழித்தடங்கள் மற்றும் ஐந்து ஹெலிபோர்ட் மற்றும் இரண்டு நீர் விமான நிலையங்கள் உள்ளிட்ட 53 விமான நிலையங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளன.